📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 05, 2026 09:03 AM

பெட்ரோல் விலை திடீர் உயர்வு: பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 உயர்த்தியது நயாரா எனர்ஜி!

பெட்ரோல் விலை திடீர் உயர்வு: பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 உயர்த்தியது நயாரா எனர்ஜி!

இந்தியாவில் உள்ள தனது பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்துவதாக தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான 'நயாரா எனர்ஜி' (Nayara Energy) அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்திய முழுவதும் 7,108 பெட்ரோல் பங்குகளை இயக்கி வரும் நயாரா எனர்ஜி, சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப நடப்பாண்டில் பலமுறை விலையை திருத்தியமைத்துள்ளது. முன்னதாக, ஈரான் மோதலால் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டபோது, மார்ச் 26 அன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தப்பட்டது. பின்னர் ஜூலை 1 அன்று அதே தொகையைக் குறைத்து, பொதுத்துறை நிறுவனங்களின் விலைக்கு நிகராகக் கொண்டு வந்தது. ஆனால், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய விலையேற்ற அழுத்தம் காரணமாக, மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 1.04 லட்சத்திற்கும் அதிகமான பெட்ரோல் பங்குகளில் 90%க்கும் அதிகமானவற்றை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களே நிர்வகிக்கின்றன. அரசு நிறுவனங்கள் தற்போது விலையை உயர்த்தாத நிலையில், நயாரா நிறுவனத்தின் இந்த திடீர் உயர்வு தனியார் மற்றும் அரசு பங்குகள் இடையே விலை வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.

இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) உள்ளிட்ட அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது விற்பனை நிலையங்களில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் பழைய விலையிலேயே விநியோகித்து வருகின்றன.

பெட்ரோல் லிட்டருக்கு ₹107.76-க்கும், டீசல் லிட்டருக்கு ₹99.55-க்கும் விற்கப்பட்டு வரும் வேளையில், நயாரா நிறுவனத்தின் தனியார் பங்குகளில் மட்டும் பெட்ரோல் விலை ₹112.76 ஆகவும், டீசல் விலை ₹102.55 ஆகவும் உயர்ந்துள்ளது.