📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 07, 2026 06:03 PM

பாதசாரியின் உடலைத் துண்டாக்கிய ஓட்டுநரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பாதசாரியின் உடலைத் துண்டாக்கிய ஓட்டுநரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அதிவேகமாகவும் மதுபோதையிலும் வாகனத்தை ஓட்டிச் சென்று, ஓய்வுபெற்ற முதியவர் மீது மோதி அவரது உடலை மூன்று துண்டுகளாகத் துண்டித்த 46 வயது ஆஸ்திரேலிய நபருக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) உறுதிசெய்தது. தண்டனையை உயர்த்தக் கோரிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரின் மேல்முறையீட்டையும் தண்டனையைக் குறைக்கக் கோரிய பிரதிவாதித் தரப்பின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த ஆடவருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை, $12,000 அபராதம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடை ஆகிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. இத்தகைய குற்றங்களுக்கு சிங்கப்பூரில் விதிக்கப்பட்ட மிக நீண்ட சிறைத் தண்டனைகளில் இதுவும் ஒன்று எனக் கருதப்படுகிறது.

குற்றம் நடந்தபோது அந்த ஆஸ்திரேலியரின் இரு குழந்தைகளுக்கு 3 மற்றும் 4 வயது என்பதால், அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியது மற்றும் மீண்டும் மதுபோதையில் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். அவரது குழந்தைகளை வாகனத்தில் ஏற்றி அபாயகரமாக வாகனத்தை ஓட்டியது தொடர்பான மூன்றாவது குற்றச்சாட்டையும் நீதிமன்றம் தண்டனை விவரத்தில் கருத்தில் கொண்டது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதியன்று, பிறந்தநாள் விருந்து ஒன்றில் மது அருந்திய அந்த ஆடவர், தமது இரண்டு குழந்தைகளையும் காரின் பின் இருக்கையில் அமரவைத்துக்கொண்டு வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

மணிக்கு 70 கிலோமீட்டர் வேக வரம்பு கொண்ட சாலையில், அவர் மணிக்கு 111 முதல் 122 கிலோமீட்டர் வரையிலான அதிவேகத்தில் காரை ஓட்டியுள்ளார். அப்போது, டன்னர்ன் சாலையைக் கடந்து புக்கிட் தீமா கால்வாயை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 64 வயது ஓய்வுபெற்ற சிங்கப்பூரரான முதியவரைக் கவனிக்காமல் அவர் மீது மோதினார்.

இதில் முதியவரின் உடல் மூன்று துண்டுகளாகப் பிளந்தது. அவரது உடலின் மேல் பகுதியும் தலையும் காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ஓட்டுநரின் மடியில் வந்து விழுந்தன. இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவரது காரின் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கியதுடன், காரிலிருந்த அவரது இரு குழந்தைகளும் காயமடைந்தனர்.