ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 குறைவு: சந்தை நிலவரம் என்ன?
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. காலையில் பவுனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், இன்று மாலை மீண்டும் பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த 1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 குறைவு
இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று (அக்.12) காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,840-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,10,720-க்கு விற்பனை ஆகிறது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று மாலை அதிரடியாக மீண்டும் சரிந்தது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,720-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,09,760-க்கு விற்பனை ஆகிறது.
இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் காலை, மாலை என தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 என மொத்தமாக குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கு விற்பனை ஆகிறது.