📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 09:33 AM

ஓமந்தூரார் டூ பட்டினப்பாக்கம்; தலைமைச் செயலகம் மருத்துவமனையானது எப்படி?

ஓமந்தூரார் டூ பட்டினப்பாக்கம்; தலைமைச் செயலகம் மருத்துவமனையானது எப்படி?

ஓமந்தூரார் டூ பட்டினப்பாக்கம்; தலைமைச் செயலகம் மருத்துவமனையானது எப்படி?

இடநெருக்கடி காரணமாக புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், அதை ஏன் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பட்டினப்பாக்கத்தில் கட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

Published : September 16, 2026 at 7:02 AM IST

-By சுதாகர் பழனிவேல்

சென்னை: ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டப்பேரவை கட்டடம் கடந்த 2010-ம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில், அந்த கட்டடம் மருத்துவமனையாக மாறியது ஏன்? என்ற வரலாற்றுக்குள் போகாமல், தற்போதைய அரசு பட்டினப்பாக்கத்தில் கட்ட திட்டமிட்டுள்ள தலைமைச் செயலக அறிவிப்பை கடக்க இயலாது.

சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாடு 16 பொதுத் தேர்தல்களை சந்தித்து, சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் முதல்வர்களாக இருந்துள்ளனர். எனினும், தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கென்று இன்றைய தேதியில் சொந்த கட்டடம் இல்லை.

நிறைவேற்ற முடியாத தலைமைச் செயலக கனவு

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் பல்வேறு வகையில் முன்னுதாரணமாக இருந்து வந்தாலும், சொந்தமாக சட்டப்பேரவை கட்டடம் இல்லை என்பது இன்றளவும் ஆச்சரியமான விஷயமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 1921-ஆம் ஆண்டில் இருந்து சட்டப்பேரவை நிகழ்வுகள் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஜார்ஜ் கோட்டையை இந்திய அரசிடம், ஆங்கிலேயர்கள் ஒப்படைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து அந்த கட்டடம் இந்திய ராணுவத்தின் வசம் சென்ற நிலையில், அந்த கட்டடத்தை தமிழ்நாடு அரசு குத்தகை அடிப்படையில் பெற்று, அதில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகமாக பயன்படுத்தி வருகிறது.

இடநெருக்கடியில் திணறும் சட்டப்பேரவை

1990-கள் வரை பெரிய அளவில் இட பிரச்சனை என்பது ஜார்ஜ் கோட்டையில் இல்லாத நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடி, ஊழியர்களுக்கான இடப்பிரச்சனை என மக்கள் பிரச்சனைகளுக்கு இணையாக தலைமைச் செயலகத்தில் இட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் வேலைக்கு வரும் ஊழியர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை என்பது அவர்களின் ஏக்கமாக உள்ளது.

இதனை சரிசெய்யும் விதமாக 2001-ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, மெரினா கடற்கரை அருகே உள்ள ராணி மேரி கல்லூரியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க திட்டமிட்டார்.

இதற்கு மாணவிகள், அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் துறை என அனைத்து தரப்பும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது. தொடர்ந்து அதிமுக ஆட்சி மாறியதும், 2006-ல் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார். சுமார் 50 ஆண்டுகளாக நீண்டு கொண்டே சென்ற தலைமைச் செயலக கனவை நிறைவேற்றும் விதமாக, 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கான அறிவிப்பு 2008-ம் ஆண்டு வெளியான நிலையில், ஏறக்குறைய சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் 2010-ம் ஆண்டு அந்த கட்டடம் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அந்த கட்டத்திலேயே நடைபெற்றது.

மீண்டும் ஓமந்தூரார் டூ ஜார்ஜ் கோட்டை

இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில், 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஜெயலலிதா மீண்டும் ஆட்சி வந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் ஜார்ஜ் கோட்டையிலேயே நடைபெறும் என்று அறிவித்தார். இதனால் மீண்டும் தலைமைச் செயலகம், ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஓமந்தூரார் கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அன்றிலிருந்து 12 ஆண்டுகளாக அந்த ஓமந்தூரார் சட்டப்பேரவை கட்டடம் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

மீண்டும் தலைதூக்கும் தலைமைச் செயலக கட்டட விவகாரம்

அதிமுக ஆட்சி தொடர்ந்து 2021-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தாலும், ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து மருத்துவமனையை இடமாற்றம் செய்யும் முயற்சி மேற்கொள்ளவில்லை. வழக்கம் போல், ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி பொறுப்புக்கு வந்த முதல்வர் விஜய், பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

இட நெருக்கடி காரணமாக புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், அதை ஏன் மக்கள் நெருக்கமும், இட நெருக்கடியும் உள்ள பட்டினப்பாக்கத்தில் கட்ட வேண்டும் என தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், அனைத்து எதிர்ப்புகளையும் கடந்து புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படுமா? அல்லது தமிழ்நாட்டின் தலைமைச் செயலக கனவு நிறைவேற இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என்பது காலத்தின் கைகளிலேயே உள்ளது.