நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா
நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா - த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்
புலம்பெயர்ந்த தென்னாப்பிரிக்கா நாட்டிற்கும், தாய்த் தமிழகத்திற்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் நவி பிள்ளை பெருமைத் தேடித் தந்திருக்கிறார் என்றும் பழ. நெடுமாறன் பெருமிதம் கூறியிருக்கிறார்.
Published : October 12, 2026 at 3:15 PM IST
சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது. உலகளாவிய அமைதியை மேம்படுத்துவதற்கும், சர்வதேச சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டுவதற்கும் நவநீதம் நவி பிள்ளை ஆற்றிய அசாத்திய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நோபல் பரிசு பெற்றிருக்கும் நவநீதம் நவி பிள்ளைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "சர்வதேச அளவில் மனிதகுலத்திற்கு எதிராக இனப்படுகொலை மற்றும் பேரழிவுகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவதற்கு எதிராகப் போராடுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு தொண்டாற்றி வரும் தென்னாப்பிரிக்கா வாழ் தமிழரான நவநீதம் நவி பிள்ளைக்கு, 2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி உலகமெல்லாம் வாழும் தமிழர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் பெருமித உணர்வையும் ஊட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக அவர் இருந்தபோது, 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு நடத்திய இனவெறிப் படுகொலைகள் குறித்தும், ருவாண்டா, பாலஸ்தீன மற்றும் காசா ஆகியவற்றில் நடந்த இனவெறிப்படுகொலைகள் குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிமன்றங்களின் தலைவராக இருந்து நேர்மையுடனும், நெஞ்சத்துணிவுடனும் இனவெறி அரசுகளுக்கு எதிராக அவர் அளித்த அறிக்கைகளும், தீர்ப்புகளும் இதுவரை யாரும் செய்ய துணியாதவையாகும்.
புலம்பெயர்ந்த தென்னாப்பிரிக்கா நாட்டிற்கும், தாய்த் தமிழகத்திற்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் அவர் பெருமைத் தேடித் தந்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள அவருக்கு தமிழக அரசின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பாராட்டுவிழா நடத்த முன்வருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் மற்றும் சமுதாய தொண்டு நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்று அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்யப்பட வேண்டும்.
அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழ்நாடு அரசும் பெருமித உணர்வுடன் ஒன்றுபட்டு, அவருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் இவ்விழாவை விரைவில் நடத்த முன்வருமாறு முதலமைச்சர் அவர்களை மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.