📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 09:03 AM

ஞானேஷ் குமார் மீதான பழைய வழக்கை தோண்டியெடுக்கும் கேரள அரசு.. அரசியல் தலைவர்கள் வரவேற்பு

ஞானேஷ் குமார் மீதான பழைய வழக்கை தோண்டியெடுக்கும் கேரள அரசு.. அரசியல் தலைவர்கள் வரவேற்பு

திருவனந்தபுரம்,

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது 20 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, கேரளம் அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் கடு மையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மேலும் சக தேர்தல் கமிஷனர்களின் எதிர்ப்பையும் மீறி தன்னிச்சையாக முடிவுகள் எடுத்ததாக வெளியான குற்றச்சாட்டில், அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

கேரளம் பிரிவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞானேஷ்குமார், மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு முன்பு கேரளத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். அப்படி கடந்த 2006-ம் ஆண்டு (அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு) மாநில பொதுப்பணித்துறை செயலாளராக பதவி வகித்தபோது, நெடுஞ்சாலைப்பணிகளுக்கு பணத்தை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஞானேஷ்குமாருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டு உள்ளார்.

ரமேஷ் சென்னிதலா தகவல்

இந்த விவகாரம் குறித்து ரமேஷ் சென்னிதலா நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

2006-ம் ஆண்டு அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரையிலான எம்.சி. சாலை மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. உலக வங்கி உதவியுடன் ரூ.215 கோடியில் நடந்த இந்த பணிகளை ஒரு மலேசிய நிறுவனம் செய்தது.

அந்த நிறுவனத்தின் திட்ட என்ஜினீயராக இருந்த லீ சீ பீன், சாலைப்பணியின்போது பல்வேறு புகார்களை எழுப்பினார். பின்னர் தாயகம் திரும்பிய அவர், அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதியிருந்த தற்கொலைக்குறிப்பில், ஞானேஷ்குமாரை வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார். அப்போது இந்த வழக்கின் விசாரணை முன்னோக்கி செல்லவில்லை. அச்சுதானந்தன் தலைமையிலான அரசு அமைந்தபிறகு, விசாரணை முடங்கியது.

செய்து முடித்த பணிகளுக்கு பணத்தை விடுவிப்பதற்கு லஞ்சம் கேட்டது, பணத்தை தாமதமாக வழங்கியது போன்றவை ஊழலுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. எனவே புகாரில் உள்ள அனைத்து அம்சங்களையும் விசாரிக்கவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சட்ட பாதுகாப்பு கோர முடியாது

தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் கேரளத்தின் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது நடந்த சம்பவம் தொடர்பான விசாரணை இது. எனவே தலைமை தேர்தல் கமிஷனருக்குரிய சட்ட பாதுகாப்பை அவர் கோர முடியாது.

கடுமையான ஊழல் தொடர்பான விசாரணை, வெளித்தலையீட்டின் காரணமாக சீர்குலைக்கப்பட்டுள்ளதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தீவிரமானதாகும். நீதியின் நலன் கருதி, இதனை முழுமையாக ஆராய்ந்து சட்டப்படி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரமேஷ் சென்னிதலா கூறினார்.

அரசியல் கட்சிகள் வரவேற்பு

ஊழல் குற்றச்சாட்டில் ஞானேஷ்குமாருக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதை கேரளத்தின் பிரதான 2 கூட்டணியை சேர்ந்த கட்சிகளும் வரவேற்று உள்ளன.

அந்தவகையில் கேரளத்தில் ஞானேஷ்குமாருக்கு எதிராக எழுந்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், ஞானேஷ்குமார் பொதுப்ப ணித்துறை செயலாளராக இருந்தபோது மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவருமான கே.எம்.முனீர் கூறுகையில், 'கேரளம் நெடுஞ்சாலைத்துறை பணியில் ஈடுபட்ட மலேசிய நிறுவன என்ஜினீயர் தற்கொலை செய்துகொள்ள வழிவகுத்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் அது தொடர்பான மற்ற அனைத்து விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்' என தெரிவித்தார்.