நாளை போலீசில் ஆஜராகிறார் திமுக மாஜி அமைச்சர் மகேஷ்; கேள்விகளுடன் போலீசார் தயார்
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் வீட்டில் கைப்பற்றப்பட்ட, 118 ஆவணங்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நாளை (செப் 18) விசாரணைக்கு ஆஜராகும், மகேஷிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டுமான அனுமதி பெறுவதில், 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து, பல ஆவணங்களை கைப்பற்றினர். அதில், தி.மு.க., ஆட்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த மகேசுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஷுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உதவியாளர்கள் வீடு, அலுவலகம் என, ஒன்பது இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
சொத்து ஆவணங்கள், வங்கி விபரங்கள், காசோலைகள், 18 மொபைல் போன்கள், 3 மடிக்கணினி, 8 பென்டிரைவ், 2 மானிட்டர் உள்ளிட்ட, 118 ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்யும் பணியை, போலீசார் தொடங்கி உள்ளனர்.
அந்த 'டிஜிட்டல்' ஆவணங்களில், தி.மு.க., ஆட்சி காலத்தில் பதிவு செய்யப்பட்டு, பின் நீக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுத்தல் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மகேஷ், ஊழல் செய்ததை நிரூபிக்கும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. உறுதியான ஆவணங்கள் கிடைத்ததன் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கும், மத்திய குற்றப்பிரிவு போலீசில், விசாரணைக்கு மகேஷ் நாளை ஆஜராக உள்ளார். கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள தரவுகளின் அடிப்படையில், அவரிடம் கேள்விகள் கேட்கப்படும். அதற்கான கேள்விகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.