நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை கொள்ளை அடித்தவர் தனிப்படை போலீசாரால் கைது!
நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை கொள்ளை அடித்தவர் தனிப்படை போலீசாரால் கைது!
நாகர்கோவில்: நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகையை கொள்ளையடித்த இசக்கிபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் ஜி.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் மதுமிதா இவரது கணவர் வினோத்துகுமார். இவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 24ம் தேதி வியாழக்கிழமை மாலையில், மதுமிதா தனது கணவர் வினோத் குமார் மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார்.
அவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்ற சமயத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டைக் கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான 120 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ. 50,000 பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர்.
வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர், பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. அதனடிப்படையில், தப்பிச் சென்ற பாதைகளில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளைக் கைப்பற்றி காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
விசாரணையின் முடிவில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இசக்கிபாண்டியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், கொள்ளை சம்பவத்திற்கு அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 118 சவரன் மீட்கப்பட்டதா என்பதை பற்றிய தகவலை காவல் துறையினர் இது வரை வெளியிடவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், முக்கியக் குற்றவாளியான இசக்கிபாண்டி, இன்ஸ்டாகிராமில் மதுமிதாவின் பக்கத்தைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வந்துள்ளார் என்பதும், அவர் வெளியே செல்வதைக் கண்காணித்தே திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.