📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 03:03 AM

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன்: முதல்வர் விஜய் பேச்சு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன்: முதல்வர் விஜய் பேச்சு

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன்: முதல்வர் விஜய் பேச்சு

சென்னை: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

நான் முதல்வராகப் பதவியேற்ற அன்றைக்கு கொஞ்சம் அவகாசம் கேட்டேன். கடன் வாங்கியதால் இந்த கஜானா நிலைமை மோசமாக உள்ளது. கொஞ்சம் நிதி நெருக்கடி எல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் நான் பதவியேற்கிறேன். அப்போதும்கூட என்னால் முடிந்ததை முயற்சி செய்தேன். இப்போது விஜய்யும் வந்து கடன்தான் வாங்குகிறார் எனச் சொன்னார்கள். ஆம், நான் கடன் வாங்குகிறேன். கொள்ளை அடிப்பதற்காக இல்லை, மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான். ஆறு சிலிண்டர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தேன். ஆனால், இப்போதுள்ள நிலைமையில் மூன்றுதான் கொடுக்க முடிந்தது.

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணித் துணையோடு அமைந்துள்ள இந்த ஆட்சிக்கு உரிமையாளர்கள் மக்கள்தான். அப்படிப்பட்ட மக்கள் அமைத்துக் கொடுத்த இந்த ஆட்சி கலையும் எனச் சொன்னவர்களின் கனவுதான் கலையும். நம்ம கட்சியை இன்னும் பலமாக்குவதற்கு தயவு செய்து விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள். நம்ம மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளரான மரகதம் குமரவேலை பெருவாரியான வாக்கு வித்தியாசத்துல மீண்டும் எம்எல்ஏவாக்க வேண்டியது உங்களின் பொறுப்பு.

தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கீழ்க் கண்ட அறிவிப்புகள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சமூக நீதி விடுதிகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டி தர அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உணவு தானியங்களை சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் சேமிப்புக் கிடங்கு கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தாய் - சேய் நலக் கட்டிடம், புதிய உயர் அடுக்கு ஒருங்கிணைந்த வெளி நோயாளிகள் பிரிவுக் கட்டிடம், மாணவர்களுக்கான தங்கும் விடுதி, தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஏரியில் உள்ள மதகு எண் ஐந்து பாசன கால்வாயை கான்கிரீட் கால்வாயாக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், சென்னை மாநகரை ஒட்டிய தொகுதியாக இருந்தும், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்கிற நிலை உள்ளது என என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட தடுப்பணை அமைக்காமலும், ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்பு பெயர் இருந்தும் கூட ஏரிகளை புனரமைக்காமலும், கால்வாய்களை தூர்வாராமலும், சீரமைக்காமலும் வஞ்சித்துள்ளனர்.

மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்களுக்கும் தங்கும் விடுதி வசதி செய்து தரப்படவில்லை. இந்த பகுதி சென்னைக்கு அருகாமையிலும் இருந்தும், அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக இருந்தும், குடியிருப்புகள் தேவை இருந்தும் முந்தைய ஆட்சியாளர்கள் வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை போதுமான அளவில் கட்டி தராமல் இருக்கும் நிலை உள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே நமது அரசு உள்ளது. உங்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசிற்கு உங்கள் பேராதரவை அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.