📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 15, 2026 06:33 PM

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், இ.கம்யூ வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், இ.கம்யூ வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் சிபிஎம் வேட்பாளர் பி.சுகந்தி (இடது), தாராபுரம் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் ப.லட்சுமணன்

சென்னை: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.சுகந்தி, தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ப.லட்சுமணன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் இடதுசாரிகள், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ப.லட்சுமணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி நேர ஊழியராக உள்ள ப.லட்சுமணன் (வயது 41) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 2011-ம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த லட்சுமணன், தாராபுரம் தாலுக்கா குழு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு கோவிந்தாத்தாள் என்ற மனைவியும், ரீபத், கோகுல் கிருஷ்ணன் என இரு மகன்களும் உள்ளனர்.

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பி. சுகந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான இவர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து முனைப் போட்டி:

தாராபுரத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இதன் மூலம் மீண்டும் அவர் இத்தொகுதியில் தவெக வேட்பாளராக களம் காண்கிறார்.

திமுக சார்பில் வழக்கறிஞர் அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் சுகன்யாவும், அதிமுக சார்பில் புறநகர்மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ள பானுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் சார்பில் கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ப.லட்சுமணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுராந்தகத்திலும் இந்த ஐந்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.