📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 08, 2026 08:00 AM

மோசமடைந்த காற்றுத் தரம்: ஜோகூரில் இன்றும் நாளையும் பள்ளிகள் மூடல்

மோசமடைந்த காற்றுத் தரம்: ஜோகூரில் இன்றும் நாளையும் பள்ளிகள் மூடல்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலம் முழுவதும் புகைமூட்டம் அதிகரித்து, காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (அக்டோபர் 8, 9) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜோகூர் இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டதாக ஜோகூர் மாநிலக் கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர் முகம்மது நாகிப் முகம்மது கஸாலி தெரிவித்தார்.

பள்ளி விடுமுறையால் பிள்ளைகள் வீட்டிலிருக்கும்போது வேலைக்குச் செல்லவேண்டிய பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் நிலை மாநில அரசாங்கத்திற்குப் புரிகிறது என்று கூறினார் பாந்தி சட்டமன்ற உறுப்பினரான திரு முகம்மது நாகிப்.

“எனவே, பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு அவரவர் நிறுவனங்களின் வசதிக்கேற்ப நீக்குப்போக்கான வேலை நேர நடைமுறைகள் உட்படத் தேவையான சலுகைகளை வழங்குவதில் முதலாளிகளின் ஒத்துழைப்பும் பரிசீலனையும் வரவேற்கப்படுகின்றன,” என்று புதன்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்காம் வகுப்பு கற்றல் மேட்ரிக்ஸ் (MPT4) அல்லது பிற மதிப்பீட்டுத் தேர்வுகளில் ஈடுபட்டுள்ள பள்ளிகள் அந்தத் தேர்வுகளை ஒத்திவைக்கும் என்றும் அவர் கூறினார்.

“ஜோகூர் கல்வித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் முடிவுகளுக்கு உட்பட்டு, இந்த மதிப்பீட்டுத் தேர்வுகள் மறுதேதியிடப்படும்,” என்றார் அவர்.

மேலும், இந்த இரண்டு நாள் விடுமுறையின் போதும் மாணவர்கள் தங்கள் பாடங்களைத் தொடர்ந்து கற்க, வீட்டுப்பாட அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் முறை மேற்கொள்ளப்படும் என்றும் திரு முகம்மது நாகிப் தெரிவித்துள்ளார்.