மாணவர் பாரதிதாசனுக்கு நிதியை விடுவிக்க நடவடிக்கை
திண்டிவனம்: மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்குக் கல்வி நிதி விரைவில் விடுவிக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மலேசியாவில் படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தனக்கான கல்வி உதவித்தொகை ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கவில்லை என்றும் அதனால் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றும் அபாயம் உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “மாணவர் பாரதிதாசனின் முழுமையான ஆராய்ச்சிப் படிப்புக்கு அரசு உதவும்.
“தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆராய்ச்சிப் படிப்பைப் படிக்கும் ஒரே மாணவர் அவர்தான் என்பதால், அவரது படிப்புத் தொடர வேண்டும்,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை அவருக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டது,” என்று செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், “ஆய்வு உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக விடுவிக்கப்படும்,” என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
மாணவர் பாரதிதாசன் மட்டுமன்றி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
திராவிட மாடல் அரசு அமைந்தவுடன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு அப்போது சுட்டிக்காட்டினார்.