📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 10:03 PM

குடிநுழைவுத் திட்டத் தோல்வி, பிரான்ஸ் போராட்டங்களின் காரணம்: ஜேடி வான்ஸ்

குடிநுழைவுத் திட்டத் தோல்வி, பிரான்ஸ் போராட்டங்களின் காரணம்: ஜேடி வான்ஸ்

வாஷிங்டன்: பிரான்சில் நடந்துவரும் மக்கள் போராட்டத்துக்கும் வன்முறைக்கும் அந்நாட்டின் அரசாங்கம் மேற்கொண்ட குடிநுழைவுத் திட்டக் கொள்கையே முக்கியக் காரணம் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், சனிக்கிழமை (அக்டோபர் 17) தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அங்கு நடந்த வன்முறைச் சம்பவங்களின் காணொளிகளையும் அவர் பகிர்ந்துள்ளார். பிரான்சில் நடந்த வன்முறையின்போது அங்குள்ள நகர மண்டபம் தீப்பிடித்து எரிவது காணொளியில் தெரிந்தது.

“ஐரோப்பிய நாடுகளில் உள்ள சுதந்திரவாதிகள் அறிவுரையின்படி மூன்றாம் உலக மக்களை பிரான்ஸ் குடியமர்த்தியது. மனிதாபிமானம், பன்முகத்தன்மை என்று அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சமூக ஒருங்கிணைப்பின் அடிப்படைகள், குடிமக்கள் அதனுடன் ஏற்று இணங்கி வாழும் தன்மை ஆகியவற்றைப் பிரான்ஸ் கருத்தில் கொள்ளாது மறுத்தது. இதுபோன்று நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டும் அதனை பிரான்ஸ் பொருட்படுத்தவில்லை,” என்று தனது பதிவில் திரு வான்ஸ் விளக்கினார்.

பிரான்சில் பள்ளிகளில் நிலவும் குறைபாடுகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக சனிக்கிழமை (அக்டோபர் 17) நாடெங்கும் நடைபெற்ற போராட்டங்களில் ஏறக்குறைய 550,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குறைந்தது 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் அமைதியான முறையில் பேரணிகள் நடத்திப் போராட்டம் நடத்திய வேளையில், வன்முறைக் குழுக்கள் பொதுக் கட்டடங்களைக் குறிவைத்து, ஆடம்பர ஆடை அங்காடிகளையும் பல்பொருள் அங்காடிகளையும் பெரிய அளவில் சூறையாடினர். காவல்துறை வாகனங்களையும் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.

போராட்டத்தினால் கிட்டத்தட்ட150 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினருடன் வன்முறைகள் ஏற்பட்டதுடன், தீ மூட்டப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

லிமோஜெஸ் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீயில் கருகி இடிந்து விழுந்தது. உலகப் போர்களைக் கடந்து நின்ற அந்த வரலாற்றுச் சின்னம், 1873ல் கட்டப்பட்டு 1883ல் திறந்து வைக்கப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வன்முறை நீடித்து வரும்நிலையில், வன்முறையைக் கண்டு அரசாங்கம் “அச்சமடையாது” என்று பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு கூறினார்.

பிரான்சைத் தொடர்ந்து இத்தாலி, பெல்ஜியத்திலும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அந்தந்த நாட்டு அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரான்சில் நடக்கும் நாடுதழுவிய வன்முறைகள் குறித்து வேடிக்கை செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். “வாருங்கள் பிரான்ஸ் செல்லலாம். புரட்சிக்குப் பெயர்பெற்ற பிரான்சுக்குச் சென்று நாமும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோம்,” என்று தமது பதிவில் தெரிவித்தார்.