கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற கோரி விவசாயிகள் சாலை மறியல்.! போக்குவரத்து பாதிப்பு
கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற கோரி விவசாயிகள் சாலை மறியல்.! போக்குவரத்து பாதிப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக செல்லும் கோரையாற்றில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் வராததால் கோரையாறு மூலம் பாசனம் பெறும் உதயமாத்தாண்டபுரம், கீழக்காடு செருப்பனையூர், நாச்சிகுளம், பின்னத்தூர், தெற்கு பள்ளியமேடு, வடக்கு பள்ளியமேடு, தில்லைவிளாகம், இடும்பாவனம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்திருந்த சுமார் 5000 ஏக்கர் சம்பா பயிர் நீரின்றி கருகி வருகிறது.
இதனால் விரக்தி அடைந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இன்று காலை விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையன் தலைமையில் உதய்மார்த்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலை கடை தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பாசனக்காரர்கள் சங்க தலைவர் செங்குட்டுவன், திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பின்னத்தூர் டி.ஜி.ராஜேந்திரன், உதயமார்த்தாண்டபுரம் பழனிவேலு, சிபிஎம் நிர்வாகி பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் நிர்வாகி காமராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி, நாச்சிகுளம் பாசனக்கார சங்கத் தலைவர் ரஹ்மத் மீரான், தேமுதிக நிர்வாகி செல்லதுரை உள்ளிட்ட சுற்று பகுதியை சேர்ந்த சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பொழுது அங்கு வந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குரு சக்திவேல் மற்றும் டிஎஸ்பி பொறுப்பு ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் செந்தூரபாண்டியன், சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் தண்ணீர் திறந்து விடப்படும் என சரியான உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியதால் போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொடர்கிறது.