📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 11:00 AM

காங்கிரஸில் வயதானோருக்கு கல்தா!

காங்கிரஸில் வயதானோருக்கு கல்தா!

புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அவரது சகோதரியும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா ஆகியோருக்கு ஆலோசனைகளை வழங்கவும், உதவி செய்யவும், கட்சியில் தனித்தனி குழுக்கள் உள்ளன. மறைந்த பிரதமர் ராஜிவிடம் பணியாற்றியவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்த குழுக்களில் இருந்தனர்.

தற்போது, அவர்களுக்கு பதிலாக இளைஞர்களை தங்கள் குழுக்களில் இருவரும் சேர்த்துள்ளனர். இந்த குழுக்களில் இருப்போர் அனைவருமே, 35 வயதிற்கு குறைவானவர்கள். ஐ.ஐ.எம்., போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்த இளைஞர் பட்டாளம் தான், ராகுலுக்கும், பிரியங்காவிற்கும் உதவுகிறது.

கரப்பான் பூச்சி கட்சியை குறித்து நேரடியாக குறிப்பிடாமல், 'சின்ன பசங்க எல்லாம் அரசியலுக்கு வந்தாச்சு... வயதானோரை துாக்கி அடியுங்கள்' என, 80 வயதிற்கு மேலாகும், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்பாகவே ராகுல் கூறியது, மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லையாம். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுலால் ஓரங்கட்டப்பட்டு விட்டனர்.

டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா ஆகியோர், திடீரென ஆகாஷ்வாணி பவனில் நுழைந்து மரத்தடியில் அமர்ந்தனர். 'இந்த பவனிலிருந்து, தேர்தல் கமிஷன் அலுவலகத்தின் பின்பக்கம் செல்ல ஒரு வழி உள்ளது. எனவே, ஆகாஷ்வாணி பவனில் நுழைந்து இதை செய்யலாம்' என, ஆலோசனை அளித்தது, ராகுல் இளைஞர்கள் குழுவாம். இந்த குழுவுடன், எந்த நேரமும் போனில் தொடர்பு கொண்டு, தன் அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறாராம் ராகுல். 'இப்படி அராஜகமாக செயல்பட்டால், அது வன்முறையில் முடியும். இதை ராகுலுக்கு யார் சொல்வது?' என, நொந்து போயுள்ளனராம் காங்., மூத்த தலைவர்கள்.