ஜெயிலர் 2 பார்க்க போறீங்களா?.. அதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க.. நெல்சனே சொல்லிருக்காரு!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமிலிருந்து, 'தலைவர் தரிசனம்' என சொல்லி தியேட்டருக்கு படையெடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து நெல்சன் பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் இணைந்த ஜெயிலர் திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அந்த சமயத்தில் எந்தத் தமிழ் படமும் அந்த மைல் கல்லை தொடவில்லை. ஏன்? இன்னும்வரைகூட தொடவில்லை. அந்த மெகா வெற்றிக்கு பிறகு அதே கூட்டணி ஜெயிலர் 2 படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. முதல் பாகத்தை விட பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு இயக்குநருக்கு இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பு: அதை நெல்சன் நிவர்த்தி செய்வாரா என்ற கேள்வியே முதலில் அப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழ காரணமாக அமைந்துவிட்டது. அதேபோ ரஜினிகாந்த்தின் ஆரா. மனிதருக்கு 75 வயது என்று சொன்னால் நம்பவே முடியாது. பலரும் வயதில் ஒன்று மரண படுக்கையில் கிடப்பார்கள் அல்லது பஞ்சு படுக்கையில் கிடப்பார்கள். இவரோ அசால்ட்டாக நடித்து தனது எனர்ஜி லெவலை காண்பிக்கிறார். இளைஞர்கள்கூட அவர் அளவுக்கு உழைக்க முடியாது என்றே கொள்ள வேண்டும்.
ட்ரெய்லர் சுமார்தான்: ட்ரெய்லர் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் படத்தில் பல நல்ல மற்றும் மாஸான சீன்களை வைத்து நெல்சன் கூஸ்பம்பஸ் கொடுப்பார் என்ற ஆவலில் இருக்கிறார்கள். படத்தில் பணியாற்றியவர்களும் நெல்சனின் ஒர்க்கிங் ஸ்டைலையும், அவரது திரைக்கதையையும் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. அண்டை மாநிலங்களில் எல்லாம் ரிலீஸாகிவிட்டது.
கொண்டாட்டம் ஸ்டார்ட்: இங்கே 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. இன்று மாலை வரை பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. எனவே இப்படம் வசூலிலும் இன்னொரு சாதனையை படைக்குமா என திரைத்துறையிலும், தியேட்டர் நிர்வாகத்தினர் மத்தியிலும் கேள்வி எழுந்திருக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரசிகர்களின் கொண்டாட்டமும் தொடங்கிவிட்டது. ரஜினி மகள்கூட காசி திரையரங்கத்தில் ரசிகர்களுடன் ஆட்டம் போட்டிருந்தார்.
நெல்சன் சொன்னது: இந்நிலையில் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசிய நெல்சன், "ஜெயிலர், ஜெயிலர் 2 வெவ்வேறு பாணியிலான படங்கள். முதல் பாகத்தின் கதை சொல்லும் விதம் வேறு, இரண்டாவது பாகத்தின் கதை சொல்லும் விதம் வேறு. கேரக்டர்களும், கதையின் தொடர்ச்சியும் இருக்கும். முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும். முதல் பாகத்தின் கதையை தொடர்ந்து உடனடியாக நடக்கும் கதை இது. ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பல கேரக்டர்கள் இதில் தோன்றுவார்கள். ரஜினிகாந்த் கேரக்டரில் எந்த மாற்றமும் இருக்காது. அதேசமயம் புதுமையான விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதில் புதிய கதாபாத்திரங்களும் தோன்றுவார்கள். சிவராஜ்குமார்,மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இதில் வருவார்கள். அவர்களுக்கு திரை நேரம் குறைவாக இருந்தாலும்; மாஸ் அம்சத்துடன் கதையோடு இயல்பாக பொருந்தும். ஜெயிலர் படத்தின் நோக்கமே ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். அந்த அம்சங்கள் அனைத்தும் ஜெயிலர் 2 படத்திலும் இருக்கும்" என்றார்.