📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 01, 2026 10:03 PM

'ஜென் சி' யை நினைத்து என் காதில் ரத்தம் வழிகிறது

'ஜென் சி' யை நினைத்து என் காதில் ரத்தம் வழிகிறது

"Gen Z" தலைமுறையினர் அறிவாளிகள் தான்.. ஆனால் அவர்களில் பல பேருக்கு தமிழை எழுதவும், வாசிக்கவும் தெரியவில்லை என்ற செய்தி வரும் போது என் காதில் ரத்தம் வழிகிறது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:-

காவிரி தமிழர்களின் கர்வம். தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கர்வம். திருக்குறள் தமிழர்களின் கர்வம். இந்த வரிசையில் தமிழர்களின் கலை கர்வம் என்று கருதப்பட்ட ஒரு மகா கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் தமிழ்நாட்டிற்கு செய்த முதல் தொண்டு என்னவென்றால் எழுத்தறிவு இல்லாத பாமரர்களையும் தன் கம்பீர குரலால் தமிழ் பேசவைத்தது. பாமர மக்களையும் இலக்கண உச்சரிப்பை பேச வைத்தது சிவாஜியின் முதல் பெருமை என்று நான் கருதுகிறேன்.

அவரது உடல் தரையில் கிடந்தது. நான் பார்த்து சொன்னேன். இதோ கிடத்தப்பட்டிருப்பது ஒரு மனிதனின் சடலமா? இல்லை வீரபாண்டிய கட்டபொம்மன் தரையில் கிடக்கிறான். கப்பல் ஓட்டிய தமிழன் தரையில் கிடக்கிறான். ஜூலியஸ் சீசர்ஸ் தரையில் கிடக்கிறான். இன்னும் இன்னும் சரித்தர புருஷர்கள் தரையில் கிடக்கிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகள் வாழ்ந்த மனிதர்களை தமிழர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு சென்ற மகா கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். சிவாஜியின் பெருமையை தமிழர்கள் இன்னும் உயர்த்தி பிடிக்க வேண்டும். மறதி என்ற நிழல் சில பொருள்கள் மீது படியலாம்.

சிவாஜியின் மீது மறதி என்ற நிழல் படியக்கூடாது. படிந்தால் தமிழர்கள் தமிழை விட்டு தள்ளி நிற்கிறார்கள் என்று பொருள் ஆகிவிடும். இன்றைக்கு 'ஜென் சி' தலைமுறை அறிவாளிகள் தான். புது முயற்சி உள்ளவர்கள் தான். ஆனால் அவர்களின் பல பேருக்கு தமிழை எழுதவும், வாசிக்கவும் தெரியவில்லை என்ற செய்தி வரும் போது என் காதில் ரத்தம் வழிகிறது தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்றால் சிவாஜியின் படத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு போட்டு காட்ட வேண்டும்.

பராசக்தியை, கட்டபொம்மனை, இன்னும் இன்னும் கப்பலோட்டிய தமிழனை பிள்ளைகளுக்கு போட்டுகாட்டினால் தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும். எந்த இடத்தில் குரல் இறங்க வேண்டும் என்று பிள்ளைகள் தமிழ் கற்றுக்கொள்வார்கள். பல்கலைக்கழகம் செய்யாத பணியை தனி மனிதாராக நின்று தமிழ்நாட்டிற்கு செய்துவிட்டு சென்றுவிட்டு இருக்கிறார். அந்த பல்கலைக்கழகத்தை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. அவர் புகழ் வாழ்க.அவரது பெருமைகள் நினைவு கூறப்படுக. அவரை தமிழ் சமுதாயம் பெருமைப்படுத்தி பெருமைப்படுக வாழ்க சிவாஜி.நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.