📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 06:33 PM

இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு: ஜவாஹிருல்லா பேட்டி

இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு: ஜவாஹிருல்லா பேட்டி

விழுப்புரம்: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறினார்.

விழுப்புரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;

தமிழகத்தில் நடந்து வரும் த.வெ.க., அரசு, கஜானா காலியாக உள்ளது என தெரிவித்து ஆட்சி செய்து வரும் நிலையில் தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கபடும் என அறிவித்துள்ளது.

இதனால், அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஜார்ஜ் கோட்டை தலைமை செயலகத்தால் போக்குவரத்து நெரிசல் இல்லை. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதை கைவிட வேண்டும்.

சட்டசபையில் கடைசி இரண்டு நாட்களில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் சைகைமொழியில் முதல்வர் விஜய் பேசியது கண்டனத்திற்குரியது.

முதல்வர் விஜய், பொதுக்கூட்ட பரப்புரைகளில் பேசுவது போன்று சட்டசபையில் பேசுகிறார். மூன்றாம் தரம், நான்காம் தரம் தலைவர்கள் போல் முதல்வர் பேசுவது கண்டிக்கத்தக்கது.

மிசா குறித்து தமிழக அமைச்சர்கள் பச்சை பொய் கூறியுள்ளனர். மிசாவால் மிகப்பெரிய கொடுமைக்கு ஸ்டாலின் ஆளாகியுள்ளார்.

மிசா வரலாற்றை முழு சோற்றில் பூசணிக்காய் மறைக்க கூடியது போல் அமைச்சர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட கூடாது. முதல்வர் பிரதான எதிர்கட்சி தலைவரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல.ஸ்டாலினை கொச்சைபடுத்தி பேசியதற்கு சிறப்பு சட்டசபையை கூட்டி முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்து ம.ம.க.,செயல்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் என்.ஆர்.சி., மற்றும் என்.ஆர்.பி., ஆகிய இரண்டையும் சேர்த்து நடத்த கூடாது. அப்படி நடத்தினால் போராட்டம் நடத்தப்படும்.

மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என்பது நாடகம்போல் த.வெ.க., கூட்டணியை அமைத்துள்ளனர். நீண்ட நாள் இந்த கூட்டணி நீடிக்காது.

இக்கூட்டணி என்பது தோல்வியில் தான் முடியும். சட்டசபையில் மரபுகளை பின்பற்றாத முதல்வர் விஜய், வெளிநாடு பயணம் குறித்து தகவல் தெரிவிக்காமல் கமுக்கமாக செயல்படுவது ஆச்சரியபடுவதற்கு இல்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கிறது.

வி.சி., கட்சி இப்போது த.வெ.க., கூட்டணியில் இருக்கலாம். எத்தனை நாள் சகித்து கொண்டு இருப்பார்கள் என தெரியவில்லை.

மலேசியா, இலங்கை லோக்சபாக்களில் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழக சட்டசபையில் ஆங்கில சொல் இணைப்போடு பேசுகின்றனர். இதனால், தமிழகத்தில் தமிழ் வாழ்கிறதா அல்லது வீழ்கிறதா என கேள்வி எழும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.