IPL 2027: சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்த 2 வீரர்களில் ஒருவர் வரலாம்.. அஸ்வின் கருத்து
IPL 2027: சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்த 2 வீரர்களில் ஒருவர் வரலாம்.. அஸ்வின் கருத்து
சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் அம்பத்தி ராயுடு அல்லது ராபின் உத்தப்பா ஆகியோரை நியமிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயிற்சியாளருக்குப் பதிலாக இந்தியப் பயிற்சியாளரையே சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.
ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பயிற்சியாளர்கள் குழுவில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக ஜாகீர் கான் தலைமைப் பயிற்சியாளராகவும், மோஹித் சர்மா பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 2018 முதல் 2023 வரை சிஎஸ்கே அணியில் விளையாடிய அம்பாட்டி ராயுடு, அணி மூன்று முறை கோப்பை வெல்ல முக்கியப் பங்காற்றினார். 2021 மற்றும் 2022 சீசன்களில் விளையாடிய ராபின் உத்தப்பா, 2021-இல் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
சிஎஸ்கே அணியின் அடுத்த பேட்டிங் பயிற்சியாளர் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "சமீபத்திய நியமனங்களை பார்க்கும்போது, சிஎஸ்கே நிர்வாகம் வெளிநாட்டுப் பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வாய்ப்பில்லை. அது நிச்சயமாக ஒரு இந்தியராகவே இருக்கும். சிஎஸ்கே நிர்வாகம் அம்பாட்டி ராயுடு அல்லது ராபின் உத்தப்பாவை பரிசீலிக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ராயுடுவின் ஓய்வுக்குப் பிறகு கடந்த மூன்று சீசன்களாக சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை. கடந்த சீசனில் 14 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் அணி 8-வது இடத்தையே பிடித்தது.
புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானின் கீழ் சிஎஸ்கே அணி தீவிரப் பயிற்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார். 2008 முதல் 2023 வரையிலான தோனியின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணியில் உடற்பயிற்சி கலாச்சாரம் பெரியளவில் இருந்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தோனி சூழ்நிலைக்கு ஏற்ப இயல்பாக முடிவெடுக்கக்கூடிய ஒரு கேப்டன் என்றும், விராட் கோலியின் அணிகளில் உடற்தகுதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தோனியின் சிஎஸ்கே அணியில் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.
"முன்பு ஐபிஎல் தொடர் ஆறு வாரங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் தற்போது நீண்ட தொடராக மாறியுள்ளதால், பெரும்பாலான வீரர்கள் ஆண்டு முழுவதும் விளையாடுகின்றனர். இதனால் உடற்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. இந்த கலாச்சார மாற்றம் சிஎஸ்கே அணியில் நிகழ வேண்டும். ஜாகீர் கான் இதனை உணர்ந்து ஒரு சிறந்த உடற்பயிற்சி பயிற்சியாளரை நியமிப்பார்" என்று அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வின் 2009 முதல் 2015 வரை தோனியின் கீழும், 2025-இல் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலும் சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ளார்.