இந்திய எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறைக்கு எதிராக இண்டியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயர்கள் நீக்கப்படுவதாகக் கூறி, இந்த நடவடிக்கைக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 11 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உள் ஆவணங்கள், கூட்டக் குறிப்புகள், தரவுத்தளங்களின் அணுகல் பதிவுகளை வெளிப்படையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான குழு அமைத்து தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்பதும் தகுந்த காரணமும், முன்னறிவிப்பும் இன்றி எந்தவொரு வாக்காளரின் பெயரையும் பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது என்பதும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளாகும்.
புதிய வாக்காளர் சேர்க்கைக்கான இணையவழி படிவம் 6ல் அண்மையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், நடைமுறையில் உள்ள தேர்தல் விதிகளுக்கு எதிராக உள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிற ஆணையர்களின் ஒப்புதல் இன்றியே தன்னிச்சையாக முக்கிய முடிவுகளை எடுத்ததாக ஊடகப் புலனாய்வுச் செய்திகளை மேற்கோள் காட்டி மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம், பேரணிகளை நடத்தினார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.