📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 03, 2026 02:03 PM

IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.. ஆசிய விளையாட்டு பைனலில் த்ரில் வெற்றி

IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.. ஆசிய விளையாட்டு பைனலில் த்ரில் வெற்றி

IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.. ஆசிய விளையாட்டு பைனலில் த்ரில் வெற்றி

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆண்கள் கிரிக்கெட்டின் தங்கப் பதக்க இறுதிப்போட்டியில், இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மாவின் அதிரடி அரைசதங்கள், அக்‌சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் துல்லிய சுழற்பந்து வீச்சால் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று தனது தங்கப் பதக்கத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டது.

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 வானளாவிய சிக்சர்களுடன் 61 ரன்கள் விளாசினார்.

மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கடைசி கட்டத்தில் திலக் வர்மா மற்றும் சிவம் துபே இணை வெறியாட்டம் ஆடியது. சிவம் துபே 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் வேகம் காட்டிய திலக் வர்மா 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 212 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் தரப்பில் அராபத் மின்ஹாஸ் மற்றும் அஹ்மத் தானியல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் சாகிப்சாதா ஃபர்ஹான் (10), உஸ்மான் கான் (3), மாஸ் சதகத் (23) அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசன் நவாஸ் தனி ஆளாக நின்று இந்திய பந்துவீச்சை பந்தாடினார். மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் சிக்சர்களை பறக்கவிட்ட அவர் வெறும் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 96 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறினார். சைம் அயூப் 29 ரன்கள் எடுத்தார்.

நெருக்கடியான கடைசி ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டனர். அக்‌சர் படேல் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். சிவம் துபே முக்கியமான நேரத்தில் சைம் அயூப் மற்றும் சதம் அடிக்க இருந்த ஹசன் நவாஸ் (96) ஆகிய இருவரின் விக்கெட்டுகளைச் சேர்த்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். முடிவில் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று புதிய வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.