📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 02, 2026 01:12 PM

IND vs PAK: "பாகிஸ்தானை லேசா எடைபோடக் கூடாது ஏன்னா..".. பைனலுக்கு முன் இஷான் கிஷன் பேச்சு

IND vs PAK: "பாகிஸ்தானை லேசா எடைபோடக் கூடாது ஏன்னா..".. பைனலுக்கு முன் இஷான் கிஷன் பேச்சு

IND vs PAK: "பாகிஸ்தானை லேசா எடைபோடக் கூடாது ஏன்னா..".. பைனலுக்கு முன் இஷான் கிஷன் பேச்சு

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு, இஷான் கிஷன் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணி, தங்கப் பதக்கப் போட்டியில் பாகிஸ்தானை சாதாரணமாக எடைபோடக் கூடாது என்றும், அந்த அணியில் திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறி உள்ளார்.

அக்டோபர் 1 அன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடினமான ஆடுகளத்தில் 5வது வரிசையில் களமிறங்கிய இஷான் கிஷன் தனி ஆளாக நின்று 46 பந்துகளில் 80 ரன்கள் விளாசி இந்தியாவை 7 விக்கெட்டுக்கு 169 ரன்கள் என்ற வலுவான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். பின்னர் ஜஸ்பிரித் பும்ரா, அக்‌சர் படேல், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை வெறும் 45 ரன்களுக்கு சுருட்டினர்.

இதையடுத்து அக்டோபர் 3 (சனிக்கிழமை) அன்று நிஷின் நகரில் நடைபெற உள்ள தங்கப் பதக்க இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி குறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில், "நாம் விஷயங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்க வேண்டும். ஆடுகளத்தின் சூழல் பேட்டிங்கிற்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பது நமக்குத் தெரியும். குறிப்பாக சாகிப்சாதா ஃபர்ஹான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சில் அச்சுறுத்தலான அணி.

இரண்டு நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று யோசித்து அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளக் கூடாது. நாம் அமைதியாக இருந்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி, நெருக்கடியான தருணங்களை ரசித்து நம் வழக்கமான ஷாட்களை ஆட வேண்டும்." என்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடுவது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய இஷான் கிஷன், "நாட்டின் தங்கப் பதக்கத்திற்காக விளையாடுவது மனதளவில் ஒரு கூடுதல் ஊக்கத்தையும், தனித்துவமான அழுத்தத்தையும் தருகிறது. இது வெறும் பிசிசிஐ தொடர்பான தொடர் மட்டுமல்ல; இங்கு எல்லாமே ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் பெருமை சார்ந்தது.

மைதானம் முழுவதும் இந்திய தேசியக் கொடிகள் பறப்பதையும், ரசிகர்கள் நமக்காக குரல் எழுப்பி உற்சாகப்படுத்துவதையும் பார்க்கும் போது உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. நம்மிடம் உலகின் தலைசிறந்த பேட்டர்களும், பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இருந்தாலும் இது ஒரு விசித்திரமான, அதிக அழுத்தம் நிறைந்த களம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கு பின் வீரர்கள் கைகுலுக்குவதை தவிர்த்து வரும் சூழலில், இந்த தங்கப் பதக்கப் போட்டி கிரிக்கெட் உலகில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.