📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 04:02 PM

“இளைஞர்கள் போராட அரசு அனுமதி மறுப்பது ஏன்?”

“இளைஞர்கள் போராட அரசு அனுமதி மறுப்பது ஏன்?”

நடிகர் பிரகாஷ்ராஜ்

காஞ்சிபுரம்: “எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை என்பது வெறும் வாக்குரிமையைப் பறிக்கும் செயல் அல்ல, அது ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்” என்று நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 13-வது மாநில மாநாடு, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சமூக செயற்பாட்டாளரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் பேசியது: “கலைஞர்கள் தங்களது திறமையால் மட்டுமே முன்னேறுவதில்லை. மக்களின் அன்பும் ஆதரவும்தான் அவர்களது வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், கலைஞர்கள், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும். நானும் மக்களுக்காகப் போராடுவேன்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) என்பது வெறுமனே வாக்குகளை நீக்குவது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே இல்லாமல் செய்யும் செயலாகும். இதற்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் வலுப்பெற்று வருகிறது. ஆனால், அவர்களை காவல் துறையினரையும் ராணுவத்தினரையும் கொண்டு தாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

விஜய் தலைமையிலான தமிழக அரசிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இங்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? ஜனநாயகத்தை அழிக்கும் செயல்களுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் போராடக் கூடாதா?

காவல் துறையினரும் ராணுவத்தினரும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். இவர்களைக் கொண்டு இப்போது மாணவர்களையும் இளைஞர்களையும் தாக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை அழிக்கும் செயல்களுக்கு எதிராக அவர்களும் ஒருநாள் கேள்வி எழுப்புவார்கள். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களுக்கு நேர்ந்தவற்றைத் தங்களது பெற்றோரிடமும் தெரிவிப்பார்கள்.

இனி பாஜகவால் வெற்றி பெற முடியாது. ஏற்கெனவே அக்கட்சி பலவீனமடைந்துவிட்டது. நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவுடன்தான் மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பது நமது கடமை. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாகும். இது வெறும் வாக்குரிமையைப் பறிக்கும் செயலுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல” என்றார்.