i'm Game Review: ஐ ஆம் கேம் விமர்சனம்.. தூள் கிளப்பினாரா துல்கர் சல்மான்.. மிஷ்கின் மிரட்டிட்டாரே!
சென்னை: மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் படத்தை இயக்கிய நஹஸ் ஹிதயத் இயக்க துல்கர் சல்மான் இந்த படத்தை தயாரித்து நடித்துள்ளார். அதிலும், 2ம் பாதியில் தனக்கு பெரிய ரோல் இல்லை என்பதை தெரிந்தும் அவர் படத்தை தயாரித்து நடித்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
விக்ரம், சமீபத்தில் வெளியான நூறு சாமி உள்ளிட்ட படங்களிலும் ஹீரோக்கள் இந்த தைரியமான ரிஸ்க்கை கதையை நம்பி எடுத்திருந்தனர். அதே போன்றதொரு ரிஸ்க்கை துல்கர் சல்மான் எடுத்த நிலையில், அது அவருக்கு கை கொடுத்ததா? அல்லது கை விட்டதா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஐ ஆம் கேம் கதை: டேன் ஜான் (துல்கர் சல்மான்) அப்பா கம்பெனி வைத்துக் கொடுத்து ஓனராக அழகு பார்த்தாலும் சூதாட்ட மோகத்தால் கோடிக் கணக்கில் கடன் வாங்கி லூசராக சுற்றும் ஹீரோ ஒரு விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்துக்குப் பிறகு லூசராக இருந்த ஹீரோ மாஸ் காட்ட ஆரம்பிக்க, அதன் பின்னணியில் இருக்கும் ஒரு ஃபேண்டஸி விஷயம் ஹீரோவை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது. சூதாட்டம் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் அழிக்கிறது. அதிலும், கிரிக்கெட்டில் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் நடைபெறும் சூதாட்டம் ஆன்லைன் பெட்டிங் ஆப் உள்ளிட்டவற்றை படம் எடுத்துச் சொன்ன விதம் Need of the Hour ஆகவே பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் சூதாட்ட வெறியில் பணத்தை இழக்கும் துல்கர் சல்மான் என்றால், இன்னொரு பக்கம் கிரிக்கெட்டுக்காக உயிரையே கொடுக்கத் துணியும் விக்னேஷ் தாஸ் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் சும்மா தோனி போல நடித்துள்ளார். அவருக்கும் துல்கர் சல்மானுக்கும் என்ன கனெக்ஷன்? அவருடைய வில்லனான டேவின் ஆபிரகாம் (மிஷ்கின்) துல்கர் சல்மானுக்கு வில்லனாக மாறுவது எப்படி என்பது தான் இந்த ஐ ஆம் கேம் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: துல்கர் சல்மானுக்கு படத்தோட கதையை விட அவருக்கான நடிப்பு போர்ஷன்களை சொன்னாலே ஓகே சொல்லிவிடுவார் போல தெரிகிறது. காந்தா படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் இடைவேளைக்கு முன்பாக எந்தளவுக்கு சிங்கிள் மேனாக நடித்துத் தள்ள முடியுமோ அந்த அளவுக்கு தனது நடிப்பை வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை சீன் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறார்.
2ம் பாதியில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல துல்கர் சல்மான் காணாமல் போக, கிளைமேக்ஸில் மீண்டும் வந்து பைட் எல்லாம் பண்ணி தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த தவறவில்லை.
பிளஸ்: ஜேக்ஸ் பிஜோய் பின்னணி இசையில் பின்னி எடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். லூசர் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஜிம்ஸி காலித்தின் ஒளிப்பதிவு அந்த கிரிக்கெட் ஸ்டேடிய காட்சிகளில் அதிலும் விக்கியின் ஹெல்மட்டுக்குள் கேமரா வைத்து படமாக்கிய விதம் எல்லாம் வேறலெவல். கேம்ப்ளிங் காட்சிகளில் சென்னையில் இருக்கிறோமா லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறோமா என்கிற அளவுக்கு புரொடக்ஷன் குவாலிட்டி தரமாகவே உள்ளது. வில்லத்தனத்தில் மிஷ்கின் இந்த படத்தில் கொஞ்சம் ஓவர் போர்ட் ஆனாலும், அந்த பாத்திரத்துக்காக மனுஷன் இந்த அளவுக்கு மிரட்டியுள்ளாரே என்று தான் அட போட வைக்கிறது. கயாடு லோஹர் அழகாகவும் சம்யுக்தா விஸ்வநாத் எமோஷனலாகவும் நடித்து ஸ்கோர் செய்துள்ளனர். கதிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
மைனஸ்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி, பீச்சாங்கை படங்களை போன்ற கதை என்பதால் ஒரு கட்டத்தில் படம் சுவாரஸ்யத்தை இழக்கிறது. முதல் பாதியில் இருந்த எண்டர்டெயின்மென்ட் 2ம் பாதியில் டோட்டலாக சீரியஸ் மோடுக்கு செல்வது மிகப்பெரிய மைனஸ் ஆகவே தெரிகிறது. ஆனால், காசு முக்கியமில்லை, ஸ்போர்ட்ஸ் தான் முக்கியம் என சொல்லி முடித்தது ஆறுதல். துல்கர் சல்மானின் தரமான நடிப்பை பார்க்க தாராளமாக ஐ ஆம் கேம் படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.