📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 03:30 PM

சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில்நல்ல முன்னேற்றம்: பிரதமர் மோடி

சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில்நல்ல முன்னேற்றம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் அனைத்துலக மாநாட்டை திரு மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது, சுற்றுச்சூழல் வழக்குகளின் நிலை, பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்குப் பட்டியல் உள்ளிட்டவற்றை வழக்கறிஞர்கள், மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) கைப்பேசிச் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்குத் தடை விதித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“புதுப்பிக்கத்தக்க எரிசக்திமீது நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். பாரிசில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, காலக்கெடுவுக்கு முன்னதாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா. 2014க்கு முன்பு, இந்தியாவில் ஆண்டுக்கு 3,000 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த ஆண்டு 2.5 மில்லியன் மின்சார வாகனங்கள் விற்பனையாகின. இது நம்பமுடியாத வளர்ச்சி.

“ஃபாஸ்டேக் முறையால், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரமும் எரிபொருள் செலவும் கணிசமாகக் குறைந்துள்ளன. அனைத்துலக சூரியசக்திக் கூட்டமைப்பு, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்புத் தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

“2014க்கு முன்பு, இந்தியாவில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவைகள் இருந்தன; அவற்றின் மொத்த நீளம் 250 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இருந்தது. இன்று இருபது நகரங்களில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவை வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்ட மின்மயமாக்கல் நடவடிக்கை, கோடிக்கணக்கான லிட்டர் டீசலைச் சேமிக்க நமக்கு உதவியுள்ளது. இது நமது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயத்துள்ளது,” என்று மோடி பட்டியலிட்டார்

செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா, வெளி நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பல்வேறு சுற்றுச்சூழல், நீதித்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தொடக்க விழாவில் இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த், வன, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.