📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 03, 2026 07:04 PM

சட்ட விழிப்புணர்வை விரிவாக்கும் ஒரு மாத கால சமூக நடவடிக்கை தொடக்கம்

சட்ட விழிப்புணர்வை விரிவாக்கும் ஒரு மாத கால சமூக நடவடிக்கை தொடக்கம்

சிங்கப்பூர் மக்கள் சட்டங்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும் சட்டம் தொடர்பான ஆதரவு அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய முயற்சிகளை விரிவுபடுத்தவும் ‘சட்ட விழிப்புணர்வு வாரங்கள்’ என்னும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.

சமூக மன்றங்களில் நடத்தப்படும் அந்த நிகழ்ச்சிகளுக்காக சமூக மேம்பாட்டு மன்றங்கள், பங்காளி அமைப்புகள் ஆகியவற்றுடன் தொண்டூழியர்களும் கைகோத்துள்ளனர்.

சிங்கப்பூரில் நவீன நீதிமுறையும் சட்டக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதை ‘எஸ்ஜிலா200’ (SGLaw200) எனப் பெயரிட்டு கொண்டாடும் தருணத்தில் இந்த சமூக நடவடிக்கை இடம்பெறுகிறது.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 5 வரை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெறவுள்ள சட்ட விழிப்புணர்வு வார நிகழ்வில் சமூகம் மற்றும் குடும்ப வாழ்க்கை, வேலை மற்றும் பணம், மின்னிலக்க அபாயங்கள் மற்றும் நீதி கேட்கும் வசதி போன்ற அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான உரை நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இடம்பெறும்.

அந்நிகழ்வின் அதிகாரபூர்வ தொடக்கம் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் சனிக்கிழமை (அக்டோபர் 3) நடைபெற்றது. தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் சட்ட நடைமுறைகள் உருவான வரலாற்றை விளக்கும் சுழல் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.

நீதியை அணுகும் வாய்ப்பு சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறு உள்ளடக்கியதாகவும் நீக்குப்போக்கானதாகவும் தொடர்ந்து உருவெடுக்க முடியும் என்பதை இவ்வாண்டின் நிகழ்வு பிரதிபலிக்கிறது.

வலுவான சட்டங்கள் மற்றும் நிறுவனங்களைத் தாண்டி, மக்கள் சட்டத்தையும் அது வழங்கும் பாதுகாப்புகளையும் புரிந்துகொள்ள உதவுவது, அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அறிவது, சட்டப் பிரச்சினைகள் எழும்போது தேவையான உதவியைக் கிடைக்கச் செய்வது ஆகியவற்றை இது குறிக்கிறது.

சட்ட நடைமுறைகள் தொடர்பான தகவல்களையும் ஆதரவையும் குடியிருப்பாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே கொண்டு சேர்க்க முயல்கிறது இந்நடவடிக்கை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த சட்ட விழிப்புர்ணவு நடவடிக்கை 400க்கும் மேற்பட்ட உரை நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைச் சென்றடைந்துள்ளது.

ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் மற்றும் 24 சமூக மன்றங்களில் செயல்படும் சமூகச் சட்ட ஆலோசனைகளின் கட்டமைப்பு, குடியிருப்பாளர்கள் சட்டத் தகவல்களையும் ஆதரவையும் எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.