சமூக வலைதளங்களில் நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டுப் பொதுக்குழுக்கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நாடக நடிகர்கள் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுக்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், 2025–26 ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு–செலவு கணக்குகளுக்கும் பேரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. சங்கக் கட்டிடப் பணிக்காக முதலில் ரூ.40 கோடி வரை கடன் பெற ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அதில் ரூ.25 கோடி கடன் பெறப்பட்டு, அசல் மற்றும் வட்டி நிலுவையின்றி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ரூ.10 கோடி வரை கூடுதல் கடன் பெற ஒப்புதல் கிடைத்துள்ளது.
தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் 2025 முதல் 2028 வரை 3 ஆண்டுகளுக்கு நீடிக்க அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலுவையில் உள்ள விஷயங்களைத் தீர்க்க, உயர்மட்டக் குழு அமைத்து, புதிய உடன்படிக்கையை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
திரைப்படங்களில் துணை நடிகர்களில் 50 சதவீத வாய்ப்பு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சம்பளம் அல்லது பிற பிரச்சினைகள் தொடர்பாகப் புகார் அளிக்கும் முக்கிய நடிகர்கள், சம்பந்தப்பட்ட திரைப்படத்துக்கான உரிய ஒப்பந்தத்தையும் இணைத்தால்தான் அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரபல நடிகர், நடிகைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான, ஆபாசமான அல்லது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கச் சங்க நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் நாசர், “நடிகர் சங்க கட்டிடம் இந்த வருடத்துக்குள் திறக்கப்பட வேண்டும் என்று அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். வெகு விரைவில் அதற்கான தேதியை அறிவிப்போம். சமீபத்தில் முதல்வரை சந்தித்தபோது திறப்பு விழாவுக்கு வருமாறு கேட்டிருக்கிறோம். தேதி முடிவானதும் முறைப்படி அனுமதி கேட்போம்” என்றார்.