📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 16, 2026 06:35 PM

சிங்கப்பூரில் 101 வனவிலங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரில் 101 வனவிலங்குகள் பறிமுதல்

சிங்கப்பூர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு வீடுகளில் தேசியப் பூங்காக் கழகத்தின் அதிகாரிகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) சோதனை நடத்தினர்.

அதில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 101 வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காயங்களுடனும் நோய்த்தொற்றும் ஏற்பட்ட நிலையில் இருந்த பெரிய பல்லி (gecko), பல அக்சலாட்டல் (axolotls) பல்லியினம் அவற்றில் அடங்கும். மேலும் பாம்புகள், ஆமைகள், பறக்கும் அணில் (sugar gliders) ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விலங்குகள் சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதி இல்லை.

2021ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட கிட்டத்தட்ட 120 வனவிலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பிறகு இப்போது பெரிய அளவில் வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“விலங்குகளைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காகவும், சமூக ஊடகத் தளங்களில் விற்பனை செய்ததற்காகவும் ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்று தேசியப் பூங்காக் கழகத்தின் அமலாக்க, விசாரணைப் பிரிவு இயக்குநர் ஜோசுவா தியோ செய்தியாளர்களிடம் புதன்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்தார்.

மோசமான வாழ்க்கைச் சூழல் காரணமாக, அந்த வீடுகளில் பதின்மூன்று விலங்குகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்ற பல விலங்குகள் மோசமான உடல்நிலையில் காணப்பட்டன. அதில் மிகவும் மெலிந்த ஒரு சிறுத்தைப் பல்லியும் அடங்கும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மீட்கப்பட்ட விலங்குகள் நீண்ட காலமாக நெரிசலான கொள்கலன்கள், மோசமான காற்றோட்டம், உணவு, தண்ணீர் இன்மை போன்ற செயற்கையான சூழலில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் சட்டவிரோத இனப்பெருக்கம், சட்டவிரோத இறக்குமதி, நண்பர்களால் கொடுக்கப்பட்டவையா என்பதை இப்போது கூறமுடியாது என்று அவர்கள் சுட்டினர்.

அனைத்து விலங்குகளையும் பரிசோதித்துத் தனிமைப்படுத்த ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 12 மணிநேரம் தேவைப்பட்டது.

பொதுவாகப் பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் நோய்களையும் ஏதும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிசெய்ய அவை ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை தனிமைப்படுத்தப்படும்.

அதன் பிறகு, அவை அவற்றின் சொந்த இடத்திற்குத் திருப்பி அனுப்பப்படலாமா அல்லது விலங்குத் தோட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கலாமா என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும்.