📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 22, 2026 12:05 PM

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

பிரிட்டிஷ் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆன்டி பர்ன்ஹாமுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து கியர் ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து திரு பர்ன்ஹாமைப் புதிய பிரதமராக பிரிட்டிஷ் பேரரசர் சார்ல்ஸ் திங்கட்கிழமை (ஜூலை 20) நியமித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் பர்ன்ஹாமுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தற்காப்பு ஆகியன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நமக்கிருக்கும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று திரு வோங் தெரிவித்துள்ளார்.

ஆசியான் கலந்துரையாடல் பங்காளியாகவும் ஐந்து நாடுகளின் தற்காப்பு உடன்பாடு வாயிலாகவும் இந்த வட்டாரத்தில் பிரிட்டன் தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஈடுபாட்டை சிங்கப்பூர் பெரிதும் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“2027ஆம் ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தை சிங்கப்பூரும் ஜி-20 அமைப்பின் தலைமைத்துவத்தை பிரிட்டனும் ஏற்க உள்ள நிலையில், பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உலகளாவிய மற்றும் வட்டாரச் சவால்களை எதிர்கொள்ளவும் நாம் அணுக்கமாக இணைந்து செயல்பட ஒரு தனித்துவ வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றார் பிரதமர் வோங்.

சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக திரு பர்ன்ஹாமைச் சந்தித்து அவருடன் இணைந்து பணியாற்றும் நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட திரு வோங், அவரை சிங்கப்பூரில் வரவேற்க விரும்புவதாகவும் கூறினார்.