சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: புதிய மேம்பட்ட விமான உணவு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுக்கும் வறுத்த கோழி, கலவை இறால் போன்ற பலவகையில் மேம்படுத்தப்பட்ட உணவுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அனைத்துப் பிரிவுகளில் பயணம் செய்வோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
வர்த்தகப் பிரிவு (பிஸ்னஸ்), முதல் பிரிவு (ஃபர்ஸ்ட் கிளாஸ்) சுவிட்ஸ் எனப்படும் சிறப்பு தனிப்பிரிவுகளில் செல்வோர் மிகவும் உன்னத வகையிலான மதுபானங்களையும் சுவைக்கலாம். உணவுகளை உண்பதற்கான கரண்டி, முள்கரண்டி, கத்தி, தட்டு போன்ற கலன்களும் உயர் ரகத்தில் வழங்கப்படும்.
ஒட்டுமொத்தமாக 100 புதிய சுவைமிகு பதார்த்தங்கள், உணவுகள், பானங்கள் ஆகியன விமானத்தில் கொடுக்கப்படும் எஸ்ஐஏ தலைமை சமையல் நிபுணரின் விருப்பத் தேர்வுப் பட்டியலில் இடம்பெறும்.
உலகப் புகழ்பெற்ற எஸ்ஐஏ விமான உள்சேவைத் தரத்தின் புனரமைப்பில் இந்த உணவு மேம்பாடும் உள்ளடங்கும் என்று அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அதோடு, நவம்பரில் எஸ்ஐஏ விமானங்களில் அடுத்த தலைமுறைக்கான நவீன வசதிகள் நிறைந்த இருக்கைகளும் ரசனையான கேளிக்கை வாய்ப்புத் திட்டமும் தொடங்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக இந்த உணவு வகைகளில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.