சிஎஸ்கேவை தொடர்ந்து பயிற்சியாளரை மாற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி.. முழு விவரம்
சிஎஸ்கேவை தொடர்ந்து பயிற்சியாளரை மாற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி.. முழு விவரம்
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2027ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு சீசனுடன் தனது பொறுப்பில் இருந்து விலகிய முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா கெய்ட்லிக்கு பதிலாக லூக் வில்லியம்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்பார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முழுநேரப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் பயிற்சியாளராக கெய்ட்லி நியமிக்கப்பட்டார். எட்வர்ட்ஸ் மூன்று சீசன்களாக (2023-2025) மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் முதல்-தர கிரிக்கெட் வீரரான லூக் வில்லியம்ஸ், மகளிர் கிரிக்கெட் பயிற்சியில் மிகச் சிறந்த சாதனைகளைக் கொண்டுள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்து பணியாற்றிய வில்லியம்ஸ், அந்த அணி 2024 இல் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியப் பங்கு வகித்தார்.
லூக் வில்லியம்ஸ் உலகளவில் மூன்று முக்கியத் தொடர்களில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ் லீக் (2022, 2023), இங்கிலாந்தின் 'தி ஹண்ட்ரட்' (உதவி பயிற்சியாளராக, 2023) மற்றும் இந்தியாவில் மகளிர் பிரீமியர் லீக் (2024) ஆகிய தொடர்கள் இதில் அடங்கும்.
மேலும், அவர் கிரேடு கிரிக்கெட்டிற்கான பிராட்மேன் பதக்கத்தை மூன்று முறை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியாளராக நீடித்த அனுபவம் கொண்ட இவர், 2025 முதல் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தது குறித்து பேசிய லூக் வில்லியம்ஸ், "மதிப்புமிக்க, வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் இணைவதிலும், திறமையான வீராங்கனைகள் மற்றும் துணை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கவும், அற்புதமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த சவாலை எதிர்கொள்ளவும், எங்களது ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பு"மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு லூக் வில்லியம்ஸை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லூக் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருபவர். மகளிர் கிரிக்கெட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், வீராங்கனைகளை மேம்படுத்துவதில் உள்ள அர்ப்பணிப்பும் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்."
"எங்களது வீராங்கனைகள் மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு சிறந்த பெருமையைக் கட்டமைத்துள்ளனர். லூக்கின் வழிகாட்டுதலிலும், ஹர்மன்பிரீத்தின் தலைமையிலும் அணி மேலும் பல வெற்றிகளைப் பெற்று, இளம் பெண்களுக்குப் பெரிய கனவுகளைக் காண ஊக்கமாக அமையும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.