சிஎஸ்கே அணி இந்த 35 வயதான தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும்.. அஸ்வின் கருத்து
சிஎஸ்கே அணி இந்த 35 வயதான தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும்.. அஸ்வின் கருத்து
மும்பை: ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்னதாக, டெல்லி அணியிலிருந்து தமிழக வீரர் நடராஜன் விடுசிக்கப்பட்டால், சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணி நடராஜனை ₹10.75 கோடிக்கு தக்கவைத்திருந்த நிலையில், தற்போது அவரை ஏலத்திற்கு முன்பாக விடுவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
35 வயதான நடராஜன், கடந்த 2026 ஐபிஎல் பருவத்தில் 10 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றமளித்தார். அவரது பந்துவீச்சு சராசரி 71.20 ஆகவும், எகனாமி 11-க்கும் அதிகமாகவும் இருந்தது.
சிஎஸ்கே அணி நடராஜனை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "நடராஜன் ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளதாக நான் கேள்விப்பட்டேன். சிஎஸ்கே அணிக்கு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள். அன்ஷுல் கம்போஜ் மற்றும் கலீல் அகமது ஆகியோர் புதிய பந்தில் பந்துவீசுவார்கள்.
எனவே, நடராஜன் ஏலத்தில் இடம்பெற்றால், அவர் சிஎஸ்கே அணிக்கு ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அவருக்குப் போட்டியாக ஏலத்தில் பங்கேற்கக் கூடும், ஏனெனில் அவர் அங்கு ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று கூறினார்.
நடராஜனின் சுமாரான ஆட்டம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. மறுபுறம், சிஎஸ்கே அணியின் செயல்பாடு இன்னும் மோசமாக இருந்தது. அந்த அணி 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தைப் பிடித்தது.
அதே வீயோ இதுகுறித்து பேசிய விஜய் சங்கர், "ஒரு தமிழ் பையன் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்திய பந்துவீச்சாளர்களில் டெத் ஓவர்களில் மிகச்சிறப்பாக வீசக்கூடியவர்கள் அதிகம் இல்லை. சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழக வீரரின் கனவாக இருக்கும்" என்று நடராஜன் சிஎஸ்கேவில் இணைவது குறித்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அனுபவம் வாய்ந்த வீரரான நடராஜன், இதுவரை 73 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவரது பந்துவீச்சு சராசரி 33-க்கும் குறைவாகவும், எகனாமி 9.21 ஆகவும் உள்ளது.