📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 19, 2026 09:34 AM

சைக்கிளோட்டிகள் பொதுவெளியில் தொல்லை: 13 பேர் விசாரணை

சைக்கிளோட்டிகள் பொதுவெளியில் தொல்லை: 13 பேர் விசாரணை

காவல்துறை இம்மாதம் 9ஆம் தேதி பெட்டிர் ரோட்டில் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் பதின்மூன்று வயது சைக்கிளோட்டி ஒருவர் உட்பட, மொத்தம் 13 சைக்கிளோட்டிகள் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

பதின்ம வயது சைக்கிளோட்டிகள் பொது வெளியில் இரவில் தொல்லை விளைவிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து பெட்டிர் ரோட்டில் அன்றைய தினம் சோதனைகள் நடத்தியதாக காவல்துறை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மொத்தம் 27 பதின்ம வயதினரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் வயது 12 முதல் 19 வரை எனவும் அவர்களில் 13 இளையர்கள் பல குற்றங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படுவதாகவும் காவல்துறை அதன் அறிக்கையில் கூறியது.

விதிமீறிய வுடிவமைப்புகளால் ஏழு சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் சைக்கிளோட்டிகளுக்கான விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

காவல்துறையின் அவசரகால தொலைபேசி எண்ணுக்கு அந்தப் பதின்ம வயதினரில் பலர் தொல்லை தரும் வகையில் அழைப்புகளைச் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களில் சிலர் அழைப்புகளை ஏற்று உரையாடிய அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

பொதுவெளியில் தொல்லை விளைவித்தது, அரசு ஊழியரிடம் தகாத வகையில் பேசியது ஆகிய குற்றங்களுக்காக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

12, 13, 14 வயதான மூன்று சிறுவர்கள் பொய்யுரைத்த குற்றத்துக்கு விசாரிக்கப்படுகின்றனர். பொதுப் பாதையில் செல்லும் சைக்கிளில் அதன் நிறுத்தும் கருவியை (ப்ரேக்) பொறுத்தாத குற்றத்துக்கு எஞ்சிய பதின்ம வயதினர் விசாரணையில் உதவி வருகின்றனர்.