சார்பாட்டா பரம்பரை 2 மூலம் இணை தயாரிப்பாளர் ஆனார் Freshworks கிரீஷ் மாத்ருபூதம்!
இயக்குநர் பா.ரஞ்சித் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். சார்பாட்டா பரம்பரை- இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது பற்றி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித். இதற்கு ’The Origin of Sarpatta Parambarai begins “Sarpatta Parambarai Round 2’ என்று இந்த திரைப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக தொழில்முனைவரும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் இணை நிறுவனரும் முன்னாள் சிஇஒ ஆன கிரீஷ் மாத்ருபூதம் இணைந்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த கிரீஷ் மாத்ருபூதம், பள்ளி, கல்லூரி படிப்பை அங்கே முடித்துவிட்டு, பின்னர் சென்னையில் எம்.பி.ஏ படித்து முடித்தார். இதையடுத்து, குக்ஸ் அண்ட் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த அவர், ஐடி துறை மீதான ஈர்ப்பால் ஜாவா கற்றுக் கொண்டார். பின்னர், HCL, eForce, Zoho உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். அதன்பின், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து FreshWorks என்ற சாஸ் நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார்.
வேகமாக வளர்ச்சி கண்ட Freshworks, அமெரிக்காவில் கால்பதித்து, அமெரிக்க பங்குச்சந்தையான NASDAQ-இல் ஐபிஓ-வை வெளியிட்டு சாதனை படைத்தது. இதன்மூலம், அமெரிக்காவில் பொது வெளியீட்டுக்கு வந்த முதல் இந்திய யூனிகார்ன் ஆனது Freshworks நிறுவனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்
தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கிரீஷ் மாத்ருபூதம், ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில் 'தலைவா' என்று குறிப்பிட்டு, அந்த ஐபிஓ-வின் குறியீட்டுப் பெயரை 'ப்ராஜெக்ட் சூப்பர்ஸ்டார்' என்று வைத்திருந்தார்.
சிறுவயதிலிருந்து தமிழ் சினிமா ரசிகரான கிரீஷ், தற்போது பா.ரஞ்சித் இயக்கும் சார்பாட்டா பரம்பரை- இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்திருப்பது, அந்த பட வெளியீட்டு அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
யோகி பாபு நடித்த மண்டேலா என்ற படத்தின் துணை தயாரிப்பாளராக முதன்முதலில் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார் கிரீஷ். தற்போது சார்பாட்டா பரம்பரை - பாகம் 2 படத்தின் தயாரிப்பில் மூவரில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். இவருடன் சேர்ந்து பா.ரஞ்சித், சாயீஷா ஆகிய இருவரும் இப்படத்தின் தயாரிப்பாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The origin of Sarpatta Parambarai begins 🥊#SarpattaParambaraiRound2#SP2 💥 pic.twitter.com/a6b7v9VZYL
அண்மையில் தான் கிரீஷ், சென்னையின் மிக உயர்தர குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான போட் கிளப் பகுதியில், ரூ.211 கோடி மதிப்பிலான சொத்தை வாங்கியுள்ளார். இந்த ஒப்பந்தம், 2026ஆம் ஆண்டில் சென்னை நகரில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க உயர்மதிப்புள்ள குடியிருப்பு சொத்து பரிவர்த்தனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள போட் கிளப் சாலையின் 13-ஆம் எண் நிலப்பகுதியில் அமைந்துள்ள 'அனிதாஸ் அபார்ட்மெண்ட்' என்ற ரூ.211 கோடி மதிப்பிலான இந்த சொத்து, சுமார் 7.65 கிரவுண்டுகள் பரப்பளவில் அமைந்துள்ளது. ஐந்து தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தின் மொத்த கட்டிட பரப்பளவு 47,168 சதுர அடியாகும்.