அதிக சம்பளம் கேட்கும் விக்ரம்?.. ஒதுக்கும் தயாரிப்பாளர்கள்?.. பிரபலம் ஓபன்
சென்னை: இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரம் கடந்த பல வருடங்களாகவே ஒரு வெற்றிக்கு தடுமாறி கொண்டிருக்கிறார். அடுத்ததாக அவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் பவர் ஹவுஸ் என்ற படத்திலும், போடி ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
சினிமாவில் பல வருடங்களாக ஒரு வெற்றிக்கு போராட்டிக்கொண்டிருந்த விக்ரமுக்கு சேது படம் வெற்றி கதவை திறந்து வைத்தது. அந்த சேது படத்துக்கு முன்பு எப்படி போராடிக்கொண்டிருந்தாரோ அதேபோல்தான் இப்போதும் அவரது நிலைமை இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் அவர் ஹிட் கொடுத்தது எப்போது என்று அவருக்கே மறந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த அளவுக்கு தொடர்ச்சியாக தோல்வி படங்களையே கொடுத்துவருகிறார்.
தொடர்ந்து முயற்சிதான்: பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான், அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் எல்லாம் நடித்தார். தங்கலான் படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்ட விதம் ரசிகர்களிடம் ஒட்டவில்லை. படம் தோல்வியடைந்தது. அடுத்ததாக தனது ரசிகர்களுக்காக முழு கமர்ஷிய ரூட்டில் இறங்கிய படம்தான் வீர தீர சூரன். கண்டிப்பாக 2000களின் ஆரம்பத்தில் கிடைத்த கமர்ஷியல் வெற்றி போல் இதில் கிடைக்கும் என நம்பியிருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
அடுத்த படங்கள்: அவரது அடுத்த படங்களின் லைன் அப் கொஞ்சம் நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது. அடுத்ததாக அவர் போடி ராஜ்குமார், ஆனந்த் சங்கர் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கிடையே 96 இயக்குநர் பிரேம்குமாருடன் ஒரு படத்தில் இணையவிருந்தார். கிட்டத்தட்ட அந்த கூட்டணி உறுதியாகியிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் நடக்கவில்லை. அதேபோல் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்கவிருந்த படமும் ட்ராப்பாகிவிட்டது.
பவர் ஹவுஸ்: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு பவர் ஹவுஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரியா ஷிபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். அடுத்த வருடம் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸாகும். இந்தப் படமாவது அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் விக்ரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு பேசுகையில், "விக்ரம் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர். ஆனால் அதை கொடுப்பதற்கு இப்போதைக்கு ஆட்கள் இல்லை. இவ்வளவு சம்பளம் கேட்பதால் விக்ரமை தேடி செல்ல தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அதனால்தான் சத்யஜோதி பிலிம்ஸ் ப்ராஃபிட் ஷேர் என்பதை கொண்டு வந்திருக்கிறார்கள். பட்ஜெட்டையும் 30 கோடி ரூபாயாக சுருக்கியிருக்கிறார்கள்" என்றார்.