அரசியலில் ENTRY கொடுக்கும் சிவகார்த்திகேயன்? ரசிகர்கள் சொன்ன பரபரப்பு தகவல்!
அரசியலில் ENTRY கொடுக்கும் சிவகார்த்திகேயன்? ரசிகர்கள் சொன்ன பரபரப்பு தகவல்!
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து மக்கள் சேவைகள் குறித்து ஆலோசித்த நிலையில், அவரது ரசிகர்கள் அரசியல் வருகை குறித்து கூறிய தகவல்கள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் விஜய், சினிமாவை விட்டு தற்போது அரசியலில் புதிய கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அதில் யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்று, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கக்கூடியவர்கள் அண்மைக்காலமாகவே தங்களின் ரசிகர்கள் கூட்டத்தை சந்திக்கும் நிகழ்ச்சிகளைப் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் விஜயைப் போல தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறாரா என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் அரசியலில் குதிக்க உள்ளாரா என்று பல கேள்விகள் எழுகின்றன.
அந்த வகையில், அண்மையில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை நேற்று சென்னை போரூரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகர்கள் கூறுகையில்,
“இது புதிதாக நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கிடையாது. ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணன் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். நற்பணி இயக்கத்தை எதிர்காலத்தில் எப்படி வளர்த்துக்கொண்டு செல்ல வேண்டும், அடுத்தடுத்து என்ன மாதிரியான பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களிடம் பேசினார். நாங்கள் ஏற்கனவே செய்து வரும் பல பணிகளையும் பாராட்டினார்.
வரும் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை எங்கள் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். எங்களால் முடிந்த உதவிகளை செய்து, அண்ணனுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து, நாங்களும் நல்ல பெயரை வாங்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்வதுதான் இந்த நற்பணி இயக்கத்தின் முழு நோக்கம். எங்களால் அண்ணனுக்கு எந்தவிதமான கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
குறிப்பாக, மொபைல் பயன்படுத்துவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளுங்கள் என்று அண்ணன் கூறினார். நிறைய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள், புரட்சிகரமான கதைகளைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார். ஒரு ஹீரோ தனது ரசிகர்களிடம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துங்கள் என்று சொல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், அண்ணன் மொபைலைக் குறைத்துவிட்டு புத்தகங்களைப் படியுங்கள் என்று கூறியது எங்களுக்கு புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்றார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் மன்ற நிர்வாகி கூறுகையில், “அண்ணன் கட்சி தொடங்குவதற்கான சூழல் இப்போதைக்கு இல்லை. அவர் இப்போதுதான் படிப்படியாக வளர்ந்து ஒரு மாஸ் ஹீரோவாக இடத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இப்போதைக்கு ரசிகர்களாகிய நாங்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அப்படிப்பட்ட சூழல் அமைந்தால், அவர் என்ன மாதிரியான கொள்கைகளையும் நோக்கங்களையும் முன்வைக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து நாங்கள் ஆதரவு அளிப்போம்” என்று தெரிவித்தார்.
இதேபோல, “நாள்தோறும் நற்பணி செய்ய வேண்டும் என்று அண்ணன் கூறியிருக்கிறார். எங்கள் ஊர்களில் எங்களால் முடிந்த அளவுக்கு இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். பள்ளிகள், பால்வாடிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். எங்களுடைய நிர்வாகிகள் தலைமையில் இந்தப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்” என்றார் மற்றொரு ரசிகர்.
மேலும், “தலைவரைப் பார்க்கத்தான் வந்தோம். இது நிர்வாகிகள் சந்திப்பு. எங்களிடம் நன்றாக பேசினார். தற்போது கொஞ்சம் பிஸியாக இருப்பதால் எங்களால் அதிக நேரம் பேச முடியவில்லை. பின்னர் தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போது பேசிக்கொள்வோம். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். முதல் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. கிளைமாக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். அடுத்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அதில் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக இப்போதைக்கு எதுவும் இல்லை. அதுபற்றி எந்த அப்டேட்டும் அவர் கொடுக்கவில்லை. நாங்கள் 13 ஆண்டுகளாக அவருடன் இருக்கிறோம். அவர் என்ன முடிவு சொல்கிறாரோ, அதற்குத் தகுந்த மாதிரி நாங்கள் நடந்துகொள்வோம். அதற்காக காத்திருக்கிறோம்” என்று சேலத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வரும் நிலையில், அரசியலில் ஏதேனும் ஈடுப்பாடு இருக்கிறதா? என்று பல கேள்விகள் எழுகின்றன. தனுஷை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூட்டத்தை நடத்திருப்பது ஒரு வேளை அரசியலில் வர உள்ளரா? என்பதை பொறுத்திருந்து பார்போம்