அனிருத்
சென்னை: அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் நவம்பர் மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. கிரீஸ் நாட்டில் திருமணத்தை முடித்துவிட்டு சென்னையில் வைத்து பிரமாண்ட ரிசப்ஷன் நடத்தவிருக்கிறார்கள். அதில் ஏராளமான விஐபிக்கள், விவிஐபிக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாநிதி மாறன் பத்திரிகை வைக்கும் பணிகளையும் தொடங்கிவிட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். முன்னணி தயாரிப்பாளர் கலாநிதி மாறன். இன்னும் சில வாரங்களில் இவர்கள் இரண்டு பேரும் உறவினர் ஆகப்போகிறார்கள். ஆம், அனிருத்துக்கும், கலாநிதியின் மகள் காவ்யாவுக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. அந்தக் காதலை முதலில் சில காலம் அவர்கள் ரகசியமாக வைத்திருந்ததாக தெரிகிறது. வெளிநாட்டில் அவர்கள் இரண்டு பேரும் ஜாலி வாக் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக்காகி; முதன்முறையாக இந்த விஷயம் மீது வெளிச்சம் திரும்பியது.
வீட்டில் சம்மதம்: வீட்டு சம்மதமும் கிடைத்ததை அடுத்து அந்த ஜோடி நிம்மதியடைந்தது. மேலும், அவர்கள் தங்கள் தொழில்களை கவனித்துவந்தார்கள். இரு குடும்பத்தினரும் அதை சில காலம் ரகசியமாக வைக்க முயற்சி செய்தாலும்; நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் அது வெளியாகிவிட்டது. அனிருத்தை பொறுத்தவரை மிக பிரபலமானவர்; அவரை விட பிரபலமானவர் கலாநிதி மாறன். ஏற்கனவே ரஜினிகாந்த்தும், கலாநிதியும் தொழில்ரீதியாக நல்ல பழக்கத்தில் இருக்கிறார்கள்.
இதுவே போதும்: மேலும், கலாநிதியின் உறவினர்களான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடமும் நெருக்கத்தில் இருப்பவர் ரஜினி. எனவே அனிருத் - காவ்யா காதலுக்கு க்ரீன் சிக்னல் காண்பிக்க இரண்டு குடும்பத்தினருக்கும் இது போதுமானதாக இருந்திருக்கும் என்பது பலரது கருத்து. விஷயம் வெளியே லீக்கானதும், இனிமேலும் தாமதிக்க வேண்டாம் என்று திருமண வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்களாம்.
வெளிநாட்டில் திருமணம்: நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அனிருத்தும், காவ்யாவும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். அதை முடித்துவிட்டு நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் ரிசப்ஷன் நடக்கவிருக்கிறது. அதில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்வார்கள். திருமண தேதி நெருங்கிவிட்டதால் பத்திரிகை வைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் நேற்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து வரவேற்புக்கான பத்திரிகையை வைத்தார் கலாநிதி மாறன்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு?: சூழல் இப்படி இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு பத்திரிகை சென்றுவிட்டதா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில் வலைப்பேச்சு குழுவினர் இதுகுறித்து பேசுகையில், "கலாநிதி மாறன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பத்திரிகை வைத்திருக்கிறார். அதுகுறித்த புகைப்படம் எதுவும் வரவில்லை" என தெரிவித்தனர். கலாநிதி மாறன் பத்திரிகை வைத்துவிட்டாரா இல்லை இனிமேல்தான் பத்திரிகை வைப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.