ஐசிசி விதிகள் அதிரடி மாற்றம்.. இன்று முதல் 73 புதிய விதிகள் கிரிக்கெட்டில் அமல்.. விவரம்
ஐசிசி விதிகள் அதிரடி மாற்றம்.. இன்று முதல் 73 புதிய விதிகள் கிரிக்கெட்டில் அமல்.. விவரம்
லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் அப்கடோபர் 1 முதல் 73 புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிகளை வகுக்கும் அமைப்பாக, லண்டனில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) இயங்கி வருகிறது. இந்த சூழலில் பேட் மற்றும் பந்துக்கு இடையிலான சமநிலையை பேண இந்த மாற்றங்களை MCC கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் நவீன கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஏற்ப விதிகளில் தெளிவைக் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளை உள்நாட்டுப் போட்டிகளில் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் போன்ற பல நாட்கள் நடைபெறும் ஆட்டங்களில், நாளின் கடைசி ஓவர் வீசப்படும் போது விக்கெட் விழுந்தால் ஆட்டம் இனி நிறுத்தப்படாது. திருத்தப்பட்ட விதி 12.5.2-இன் படி, விக்கெட் விழுந்தாலும் அந்த ஓவரின் மீதமுள்ள பந்துகளை வீசி முடிக்க வேண்டும். புதிய பேட்டர் களம் இறங்கி அந்தப் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும்.
முன்னதாக, கடைசி ஓவரில் விக்கெட் விழுந்தால் அன்றைய நாளின் ஆட்டம் உடனடியாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள பந்துகள் அடுத்த நாள் காலையில் வீசப்படும். பந்துவீசும் அணிக்கு சாதகமாகவும், பேட்டிங் செய்யும் அணி வேண்டுமென்றே நேரத்தை கடத்துவதைத் தவிர்க்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பவுண்டரி லைன் அருகில் பிடிக்கப்படும் கேட்ச்களுக்கான விதி 19.5.2-இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லைக்கோட்டிற்கு வெளியேயிருந்து காற்றில் எம்பி பந்தைத் தொடும் ஃபீல்டர், காற்றில் இருக்கும்போது ஒருமுறை மட்டுமே பந்தைத் தொட அனுமதிக்கப்படுவார். அதற்குப் பிறகு, ஃபீல்டர் எல்லைக்கோட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். இந்த விதி ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் ஐசிசி (ICC) அமைப்பால் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விதி 19.8 முந்தைய விதிகளில் இருந்த குழப்பத்தை நீக்கும் வகையில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. ரன்களைத் தடுக்க அல்லது ரன் அவுட் செய்ய முற்படும் போது, ஸ்டம்புகளை நோக்கி பந்தை எறிய முயல்வது மட்டுமே ஓவர்த்ரோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பந்தைத் தடுக்க முயலும் போது ஏற்படும் தவறுகள் ஓவர்த்ரோவாக கருதப்படாது.
பந்து எப்போது Dead Ball ஆகும் என்பதைத் தீர்மானிப்பதில் நடுவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய விதி 20.1.1.1-இன் படி, பந்து டெட் பால் ஆவதற்கு அது பந்துவீச்சாளர் அல்லது விக்கெட் கீப்பரின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்தவொரு ஃபீல்டரின் கையிலோ அல்லது தரையிலோ பந்து அசைவற்று இருக்கும் போது, ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக நடுவர் கருதினால் அதை டெட் பாலாக அறிவிக்கலாம்.
விதி 27.3.1 விக்கெட் கீப்பரின் நிற்குமிடத்திற்கான தேவைகளை மாற்றியமைக்கிறது. புதிய விதியின்படி, பந்து வீசப்பட்டவுடன் விக்கெட் கீப்பர் முழுமையாக விக்கெட்டுகளுக்குப் பின்னால் இருக்க வேண்டும். பந்து வீசுவதற்கு முன்னதாக ரன்-அப் எடுக்கும் போது விக்கெட் கீப்பர் தனது கையுறைகளை ஸ்டம்புகளுக்கு முன்னால் வைத்திருக்கலாம், ஆனால் பந்து வீசப்படும் தருணத்தில் அவை முற்றிலும் ஸ்டம்புகளுக்கு பின்னால் செல்ல வேண்டும்.
பேட்டர் ஒருவர் ஷாட் அடித்த பிறகு, தனது பேலன்சை இழந்து ஸ்டம்புகள் மீது விழுந்தால் அது ஹிட் விக்கெட்டாக கருதப்படும். ஷாட் அடித்த பிறகும் இந்த விதி பொருந்தும். ஆனால், ஃபீல்டர் ஒருவரால் தள்ளிவிடப்பட்டு ஸ்டம்பில் விழுந்தால் அது அவுட் இல்லை. மேலும், பேட் அல்லது ஹெல்மெட் போன்றவை வேறு ஒரு வீரரின் மீது பட்டு பின்னர் ஸ்டம்பில் விழுந்தால் அது ஹிட் விக்கெட் ஆகாது. ஆனால் தற்செயலாக கை நழுவிப்போன பேட் நேரடியாக ஸ்டம்பில் பட்டால் அவுட் வழங்கப்படும்.
பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு கிரிக்கெட் போட்டிகளில் லாமினேட்டட் பேட்டுகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிலேயே ஜூனியர் கிரிக்கெட்டில் இதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொழுதுபோக்கு கிரிக்கெட்டிற்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டுகள் மூன்று மரத்துண்டுகள் வரை சேர்த்து தயாரிக்கப்படலாம். இது பேட்டுகளின் விலையைக் குறைக்க உதவும் என்றும், வழக்கமான பேட்டுகளை விட கூடுதல் சாதகத்தை இவை தராது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, பேட்டர்கள் வேண்டுமென்றே ஓடும் Short Runs குறித்த விதிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வேண்டுமென்றே பேட்டை கிரீஸ்க்குள் வைக்காமல், ஓடினால், அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பந்துவீசும் அணியினர் முடிவு செய்யலாம். மேலும், ஆண்கள், பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துகளின் அளவுகள் மூன்று வகைகளாக தரப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்கள் கிரிக்கெட்டுக்கு Size 1 பந்து பயன்படுத்தப்படும்.