📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 21, 2026 10:03 PM

ஐ.ஐ.டி., மாணவர் தற்கொலை பேராசிரியர் மீது வழக்கு

ஐ.ஐ.டி., மாணவர் தற்கொலை பேராசிரியர் மீது வழக்கு

மும்பை: மும்பையில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, பேராசிரியரும் தேர்வு கண்காணிப்பாளருமான சூர்யநாராயண டூல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவரை டீன் பதவியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து, ஐ.ஐ.டி., நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த சாஹில் வாகோடே, 20, என்பவர் மும்பை பவாயில் உள்ள ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி இருந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில், சாஹில், தன் மொபைல் போன் மூலம் வினாத்தாளை ‘சாட்ஜிபிடி’ செயலியில் பதிவேற்றி விடைகளை தேடினார். அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அவர் பிடிபட்டுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சாஹில், தன் விடுதி அறையில் கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாஹிலின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பை ஐ.ஐ.டி., மாணவர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையே, உயிரிழந்த மாணவன் சாஹில், ஐ.ஐ.டி., வளாகத்தில் ஜாதி ரீதியான துன்புறுத்தல் ஆளானதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, ஐ.ஐ.டி., மும்பை பேராசிரியர் சூர்யநாராயண டூல்லா உட்பட சில அதிகாரிகள் மீது தற்கொலைக்கு துாண்டுதல் மற்றும் பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக ஐ.ஐ.டி., நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, சாஹிலின் மரணத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் சூர்யநாராயண டூல்லா வகித்து வந்த டீன் பதவியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.