📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 18, 2026 01:03 PM

அ.தி.மு.க., அதிருப்தி உறுப்பினர்களிடையே... மனமாற்றம்!பொதுச்செயலர் பழனிசாமியை நம்புவதாக அறிவிப்பு

அ.தி.மு.க., அதிருப்தி உறுப்பினர்களிடையே... மனமாற்றம்!பொதுச்செயலர் பழனிசாமியை நம்புவதாக அறிவிப்பு

- நமது நிருபர் -

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர், பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, கட்சியை பழனிசாமி பலப்படுத்துவார் என, உருக்கமாக பேசியுள்ளனர். அவர்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றம், அ.தி.மு.க.,வினரிடையே பேசுபொருளாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 25 பேர், த.வெ.க., அரசுக்கு ஆதரவாக சட்டசபையில் ஓட்டளித்தனர். தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக, பழனிசாமி மீது அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆனாலும், அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் யாருக்கும், த.வெ.க., அமைச்சரவையில் பதவி கிடைக்கவில்லை. இதனால், ஏற்பட்ட விரக்தியில், 10க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி பக்கமே திரும்பினர். ஆறு பேர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் சேர்ந்து விட்டனர்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் காலியான மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், த.வெ.க., வென்றது. ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில், இங்கு வென்ற அ.தி.மு.க., தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனால், பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கட்சியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லாமல், தவறான முடிவுகளை எடுக்கும் பழனிசாமி தான், அ.தி.மு.க.,வின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என, நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால், அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க.,வுக்கு செல்லக்கூடும் என்ற தகவல் வெளியானது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை குதிரை பேரம் வாயிலாக இழுக்க, அமைச்சர் செங்கோட்டையன் முயற்சிப்பதாக, கவர்னரிடம் அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார்.

இந்தச் சூழலில், அ.தி.மு.க.,வின், 55வது ஆண்டு தொடக்க விழா, நேற்று தமிழகம் முழுதும் நடந்தது. அதையொட்டி, கோவை, ஆர்.எஸ்.புரத்திலுள்ள தொண்டாமுத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நேற்று முன்தினம் வேலுமணி அளித்த பேட்டி:

இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தோற்றாலும் செல்வாக்கு குறையவில்லை. எதிர்காலத்தில் கட்சி மேலும் பலப்படும். அ.தி.மு.க. எங்கள் இயக்கம். நாங்கள் எங்கும் செல்லவில்லை. தினகரனை கூட்டணியில் சேர்த்திருந்தால், 2021-ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும். 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.வுடன் இருந்திருந்தால், நான்கு மத்திய அமைச்சர்களை பெற்றிருக்கலாம்.

கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், பிரிந்து போனவர்களை பொதுச்செயலர் பழனிசாமி ஒன்றிணைத்து, அரவணைக்க வேண்டும். பிரச்னைகளை ஆராய்ந்து, அனைவரையும் ஒன்று சேர்த்து, கட்சியை பலப்படுத்துவார் என்று நம்புகிறோம்.

செங்கோட்டையன் த.வெ.க.,வுக்கு செல்லும் அளவுக்கு வலுக்கட்டாயமான ஒரு சூழல் ஏற்பட்டது. சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும். அ.தி.மு.க.,வை பலப்படுத்துவதே எங்கள் முதன்மையான நோக்கமாக இருக்கும். தொண்டர்களின் உழைப்பு தான் கட்சியின் உண்மையான பலம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டசபை தொகுதி, கணபதிபட்டு கிராமத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க., ஆண்டு விழா நிகழ்ச்சியில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம் பங்கேற்றார். பின், அவர் அளித்த பேட்டி:

'மறப்போம், மன்னிப்போம்' என்ற எண்ணத்துடன், நடந்ததை பற்றி நினைக்காமல், தவறுகள் இரு பக்கமும் இருக்கலாம் என்பதை உணர்ந்து, அனைவரும் ஒற்றுமையாக இருந்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஜெயலலலிதா சொன்னது போல, நுாற்றாண்டு காலம் அ.தி.மு.க., நிலைத்து நிற்க வேண்டும். இதற்கு ஒரு சிறு துரும்பையும் விடக்கூடாது. அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும்.

தொண்டர்கள் மத்தியில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கினால் தான், மக்களுக்கும் நம் மீது நம்பிக்கை வரும். நான் யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் தோல்வி குறித்து பேச விரும்பவில்லை. நடந்தது, நடந்து முடிந்ததாக இருக்கட்டும்.

இந்த இயக்கம் வலிமை பெற, எனது முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்று தான் சொன்னேன். நான் சொன்ன, 24 மணி நேரத்தில், எனது தொகுதியில், 120-க்கும் மேற்பட்ட கிளை செயலர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தொண்டர்களை நீக்கும் நிலை வந்திருப்பது வேதனை அளிக்கிறது.

நம்மை நாமே சுயபரிசோதனை செய்து, ஒற்றுமையாக இருந்தால் யாரும் உள்ளே வர முடியாது. தவறுகளை நம்மிடம் வைத்துக்கொண்டு, இன்னொருவர் மீது குறை சொல்வதில் அர்த்தமில்லை. எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை.

பழனிசாமியை கடுமையாக எதிர்த்தவர்கள், இப்போது மனம்மாறி, அவரை நம்புவதாக பேசியிருப்பது, அ.தி.மு.க., விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நடந்த மாந்தீஸ்வரர் பரிகார பூஜையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார்.திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடப்பது வழக்கம். காலை, 6:00 மணி முதல் 3:00 மணி வரை நடக்கும் இந்த பூஜையில் பங்கேற்றால் சனி, ஜென்ம தோஷம் தீரும் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில் நடந்த பரிகார பூஜையில், வேலுமணி பங்கேற்றார். மூலவரை தரிசித்த பின், அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க.,வின், 55ம் ஆண்டு துவக்க நாளை ஒட்டி, திருவாலங்காடு ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.