5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, ஒரு தொகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும், இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
Published : October 1, 2026 at 8:48 PM IST
சென்னை: தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் சம்மந்தப்பட்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஜூலை 10ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. தற்போது அந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல, இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 151 A-ன் படி 6 மாத கால அவகாசத்தில் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் முன்பே மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டுமெனில், தொகுதியில் இரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டிருக்க வேண்டும்.
இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், இரண்டாவது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது என நீதிபதி பி.பி.பாலாஜி தீர்ப்பளித்துள்ளதாகவும், அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வாதத்துக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, ஒரு தொகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தாலும், இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.