340 விரைவு, சொகுசு பஸ்கள் சாதாரண கட்டணத்தில் இயக்கம் : ஆண் பயணியருக்கு கட்டணம் குறைந்தது
சென்னை : மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் இயக்கப்படும், 340 விரைவு, சொகுசு புறநகர் அரசு பஸ்கள், சாதாரண கட்டணத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதால், ஆண் பயணியருக்கு, 15 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சாதாரண கட்டண பஸ்களில், மகளிர் இலவச பயண திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், 'வெற்றி பயணம்' என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மாநகர் மற்றும் நகர் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரண பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதனால், சென்னையில் சொகுசு மாநகர பஸ்களிலும், மாவட்டங்களில் புறநகர் சாதாரண கட்டண பஸ்களிலும், பெண் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த வகை பஸ்களை, பயணியர் எளிதில் அடையாளம் காணும் வகையில், 'வெற்றி பயணம்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளதுடன், 'டிஜிட்டல்' பலகையும் அமைக்கப்பட்டு உள்ளது.
கட்டணம் குறைவு எப்படி?
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகர விரைவு, சொகுசு பஸ்களும், புறநகர் சாதாரண பஸ்கள் மற்றும், 40 கி.மீ.,க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பஸ்கள் என, 12 ஆயிரத்து 695 பஸ்களில், மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதில், மாவட்டங்கள், முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்படும் 2,390 புறநகர் சாதாரண கட்டண பஸ்களும் அடங்கும். இந்த விரிவாக்க திட்டத்துக்கு முன், 2,050 பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்போது, 340 விரைவு, சொகு புறநகர் பஸ்கள், சாதாரண கட்டணத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், இந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆண் பயணியருக்கு துாரத்துக்கு ஏற்றார் போல், 10 ரூபாய் முதல் 15 வரை கட்டணம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.