விஜய், அஜித் லண்டன் சந்திப்பு.. சண்டை போடாம இருங்களேன்.. வரலட்சுமி வைத்த கோர்க்கை
சென்னை: விஜய்யும், அஜித்தும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களாக இருப்பவர்கள். ஒருவர் இப்போது முதலமைச்சராகவும், இன்னொருவர் நடிகர் மற்றும் ரேஸ் ஆர்வலராகவும் இருக்கிறார்கள். சமீபத்தில் லண்டனில் நடந்த கார் ரேஸை விஜய்தான் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அவர்களது சந்திப்பு குறித்து நடிகை வரலட்சுமி பேசியிருக்கிறார்.
விஜய், அஜித் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள். ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் இணையவிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அஜித் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனையடுத்து அவர்கள் தனித்தனி பாதையில் பயணிக்க தொடங்கினார்கள். இரண்டு பேருமே தங்களது திறமையின் காரணமாக உயர்ந்த இடத்துக்கு சென்றார்கள்.
வலுத்த சண்டை: அவர்கள் படங்கள் வந்தாலே தியேட்டர்களில் திருவிழா கோலம்தான் இருக்கும். மேலும் இரண்டு பேரின் ரசிகர்களும் சகட்டுமேனிக்கு சண்டையும் போட்ட கதையெல்லாம் உண்டு. அதை இரண்டு பேருமே கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள் என்ற விமர்சனம் இன்றளவும் உண்டு. பிறகு படிப்படியாக குறைந்தாலும் அந்த சண்டை ஆன்லைனுக்கு மாறியது.
இப்போது சந்திப்பு: சூழல் இப்படி இருக்க இப்போது விஜய் முதலமைச்சராக மாறிவிட்டார். அஜித் நடிகராக மட்டுமின்றி ரேஸ் ஆர்வலராகவும் இருக்கிறார். சமீபத்தில்கூட லண்டனில் இருக்கும் சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டில் நடந்த கார் ரேஸில் அஜித் கலந்துகொண்டார். ஏகேவின் அழைப்பை ஏற்று அதனை விஜய்தான் தொடங்கி வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது.
வரலட்சுமி சொன்னது: மேலும் விஜய்யை தனது ரேஸ் காரில் அமர வைத்து ஒரு ரவுண்டும் அஜித் அழைத்து சென்றார். இந்நிலையில் இவர்கள் சந்திப்பு குறித்து நடிகை வரலட்சுமி தனியார் யூடியூப் சேனலில் பேசுகையில், "ரசிகர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது என்று தெரியவில்லை. ஏன் இரண்டு பேருக்கும் ரசிகர்களாக இருக்க முடியாதா? நெகட்டிவிட்டியை பரப்பாதீர்கள். அன்பை மட்டும் பகிருங்கள். பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும். யாரையும் குறை சொல்லாமல் ஒருவரின் ரசிகராக இருக்கலாமே. பெண்கள் பாதுகாப்புக்காக விஜய் நிறைய செய்கிறார். அது ரொம்ப முக்கியமான விஷயம். குற்றங்கள் நடக்காத உலகம் வேண்டும். பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் பட வேண்டும். போதை இல்லாத சமூகத்தையும் உருவாக்க வேண்டும். அதற்கும் விஜய் முயற்சி செய்கிறார்" என்றார்.