வெற்றி பயணம்' திட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ள, 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோட்டை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பள்ளி, கல்லுாரி மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், முதியோர் இலவசமாக பயணம் செய்யும் வகையில், 'விடியல் பயணம்' திட்டம், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம், 'வெற்றிப் பயணம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, கடந்த, 2ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இதன் வாயிலாக, தமிழகம் முழுதும் ஓடும், 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்நிலையில், இத்திட்டத்தை எதிர்த்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
முதல்வர் விஜய் விரிவுபடுத்தியுள்ள, 'வெற்றிப் பயணம்' திட்டம் காரணமாக, தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும். இத்திட்டத்தின் கீழ், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது.
அதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பஸ்களிலும், 'வெற்றிப் பயணம்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற, தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை, தமிழக அரசு ஏற்கவில்லை. மேலும், சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்த, இத்திட்டம் தொடர்பாக, எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே, இத்திட்டத்தை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை, 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது