"வைபவை கண்டு எங்களுக்கு பயமில்லை ஏன்னா..".. ஜப்பான் கிரிக்கெட் அணி கேப்டன் கெண்டல் சவால்
"வைபவை கண்டு எங்களுக்கு பயமில்லை ஏன்னா..".. ஜப்பான் கிரிக்கெட் அணி கேப்டன் கெண்டல் சவால்
டோக்கியோ: இந்திய மற்றும் ஜப்பான் கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச ஆட்டம் வரும் செப்டம்பர் 22 அன்று சானோ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியைக் கண்டு தங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்று ஜப்பான் கேப்டன் கெண்டல் கடோவாகி-ஃபிளெமிங் சவால் விடுத்துள்ளார்.
இதுவரை ஜப்பான் அணியுடன் இந்திய ஆண்கள் அணி இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடியதில்லை. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர் ஜப்பானில் நடைபெறுவதால் இந்திய அணி ஜப்பான் செல்ல உள்ளது. அப்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் ஒரு சர்வதேச டி20 போட்டி நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியா - ஜப்பான் இடையே கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. ஜப்பான் அனுபவம் குறைந்த அணி என்றாலும், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ்வை சமாளிப்போம் என நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார் ஜப்பான் அணியின் கேப்டன்.
விஸ்டன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய ஜப்பான் கேப்டன் கெண்டல், "இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவரை வீழ்த்துவதற்கான வியூகம் எங்களிடம் தயாராக உள்ளது. எங்கள் அணியில் 17 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சார்லி ஹாரா-ஹின்ஸ் இருக்கிறார். அவர் ஏற்கனவே வைபவை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். எனவே அவரை நாங்கள் எளிதாகச் சமாளிப்போம்" என்று கூறினார்.
கடந்த 2024-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த போது சார்லியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி ஆட்டமிழந்தார். அந்த பழைய சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே ஜப்பான் கேப்டன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஏற்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "எங்கள் மைதானத்தில் பொதுவாக 500 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளது. ஆனால் இந்திய நட்சத்திர வீரர்களைக் காண டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் இருந்து சுமார் 2000 முதல் 3000 ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்காக மைதானத்தில் கூடுதல் தற்காலிக பார்வையாளர் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடர்களில் மிரட்டி சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக, ஜப்பான் கேப்டன் விடுத்துள்ள இந்த சவால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.