வைபவ் சூர்யவன்ஷி வீக்னஸ்.. அரைசதம் அடிக்கும் முன்பே அவுட்.. துலீப் டிராபி பைனலில் என்ன நடந்தது?
வைபவ் சூர்யவன்ஷி வீக்னஸ்.. அரைசதம் அடிக்கும் முன்பே அவுட்.. துலீப் டிராபி பைனலில் என்ன நடந்தது?
சென்னை: 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியில் தென் மண்டலத்திற்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடிய கிழக்கு மண்டலத்தின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். சிராஜ் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிக்சர், பவுண்டரிகளைப் பறக்கவிட்ட அவர், அரைசதம் அடிக்கத் தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவரது விக்கெட் விழுந்ததன் பின்னணியில் அவரது பலவீனத்தை விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர்.
தென் மண்டல வேகப்பந்து வீச்சாளர் மிலிந்த் வீசிய ஷார்ட் பந்தை லெக் திசையில் தூக்கி அடிக்க வைபவ் முயன்றார். ஆனால், பந்தின் கூடுதல் பவுன்ஸ் காரணமாக, பந்து அவரது பேட்டின் மேல் பகுதியில் பட்டு மிட்-விக்கெட் திசையில் காற்றில் உயர்ந்தது. டீப் ஸ்கொயர் லெக் திசையில் இருந்து தனது வலதுபுறமாக வேகமாக ஓடிவந்த மாற்று ஆட்டக்காரர் தனய் தியாகராஜன், அந்த கேட்ச்சை மிகச் சிறப்பாகப் பிடித்து வைபவை வெளியேற்றினார்.
இந்த விக்கெட்டுக்கு பின்னால் வைபவ்வின் பலவீனம் உள்ளது. கடந்த சில ஓவர்களாக வைபவ் சூர்யவன்ஷிக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுமுனையில் அபிமன்யு ஈஸ்வரன் வேகமாக ரன் குவித்து வந்ததால், வைபவுக்கு பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு குறைந்தது. இதனால் அவரது ரன் வேகம் மந்தமானது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபட, ஒரு பெரிய ஷாட் ஆட வேண்டும் என்று அவர் அவசரப்பட்டார்.
வைபவ் எப்போதும் பெரிய சிக்ஸ் அடிக்க ஆசைப்படுவதை பயன்படுத்தும் பந்துவீச்சாளர்கள் ஷார்ட் பந்துகளை வீசி அவரை பெரிய ஷாட் அடிக்கத் தூண்டுகிறார்கள். பந்து சற்று கூடுதல் பவுன்ஸ் ஆனால் வைபவ் சிக்ஸ் அடிக்க முயற்சிக்கும் போது பந்து அதிகம் மேலே எழும்பி கேட்ச் ஆக மாறுகிறது. அதே பாணியில் தான் இந்தப் போட்டியிலும் அவர் தனது விக்கெட்டை இழந்தார்.
பந்துவீச்சாளர்கள் வைபவை வீழ்த்த தொடர்ந்து இதே போன்ற ஷார்ட் பந்துகளை வீசும் உத்தியைத்தான் கையாண்டு வருகின்றனர். வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து கிழக்கு மண்டல அணிக்கு அவர் ஒரு சிறப்பான அதிரடி துவக்கத்தை தந்தார்.
அவரது அதிரடி ஆட்டம் கிழக்கு மண்டலத்திற்கு பலம் என்றாலும், இக்கட்டான சூழலில் பொறுமையைக் கடைப்பிடித்து பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டியது அவசியம் என்பதை இந்த விக்கெட் அவருக்கு உணர்த்தியிருக்கும். தற்போது 26 ஓவர்கள் முடிவில் கிழக்கு மண்டல அணி 2 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.