📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 11:00 AM

உலக எழுத்தறிவு தினம்: பானை ஓடுகளில் 'தமிழி' எழுத்துகளை பொறித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக எழுத்தறிவு தினம்: பானை ஓடுகளில் 'தமிழி' எழுத்துகளை பொறித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில் 'தமிழி' (தமிழ் பிராமி) எழுத்து வடிவில் தங்களது பெயர்களை எழுதி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தியுள்ளனர்.

செப்.8-ம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள போசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இணைந்து வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். தற்காலத் தலைமுறை மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் தொன்மையையும், நமது எழுத்து வடிவங்களின் வரலாற்று வளர்ச்சியையும் எளிதாகப் புரிய வைக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர்கள் பயன்படுத்திய எழுத்து வடிவம் 'தமிழி' (தமிழ் பிராமி) என்று அழைக்கப்படுகிறது. இந்த எழுத்து வடிவத்தைக் கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள், பழங்காலத் தமிழர்கள் பாணியில் மண்பானை ஓடுகளில் தங்களின் பெயர்களைத் தங்கள் கைப்படவே பொறித்து மகிழ்ந்தனர். இந்நிகழ்விற்கு போசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை கலைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் சற்குணன், பழங்காலத்தில் எகிப்து நாட்டின் 'பெரெனிகே' துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் முதல், அண்மையில் தமிழகத்தின் கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் வரை அனைத்திலும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இதன்மூலம், பழந்தமிழர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய பொருட்களிலேயே எழுத்தறிவைப் பதிவு செய்திருப்பது தெளிவாகிறது. பழங்காலத் தமிழகத்தில் மன்னர்கள், புலவர்கள் மட்டுமின்றி, பானை செய்யும் கைவினைஞர்கள், வணிகர்கள் மற்றும் அடித்தட்டு சாமானிய மக்கள் வரை அனைவருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இந்த மண்பாண்டக் கீறல்களே மிகச் சிறந்த சான்றாகும்.

குறிப்பாக, கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள எழுத்துப் பொறிப்புகள், கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே (சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே) தமிழர்கள் மிகச்சிறந்த எழுத்தறிவு பெற்ற நாகரிக சமூகமாகத் திகழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்குப் பறைசாற்றுகின்றன. நமது முன்னோர்களின் வரலாற்றுப் பெருமையை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மேற்கொண்ட இந்த வித்தியாசமான முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்