டோரதி
டோரதி - சினிமா விமர்சனம்...
டோரதியாக கீர்த்தி சுரேஷ் சிறிது நேரமே வந்தாலும், படம் நெடுக அவரின் இருப்பை உணர முடிகிறது.
பாலின அடையாளம் என்பது வெறும் பிறப்பு சார்ந்ததல்ல, அது மனம் சார்ந்த உணர்தலும்கூட என்பதைத் துணிச்சலுடன் சொல்கிறாள் ‘டோரதி'.
90-களில் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. அப்பாவின், அண்ணன்களின் சாதிவெறியால் தன் அம்மாவையும் அக்காவையும் இழந்த சுப்புவுக்கு (சனந்த்) சிறுவயதிலேயே நண்பனாகிறார் கார்த்தி (ரிஷிகாந்த்). குடும்பப் பின்னணியால் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து என்று வளர்கின்றனர் கார்த்தியும் சுப்புவும். இந்த நிலையில் சுப்புவின் வாழ்க்கையில் அண்ணியாக டோரதி (கீர்த்தி சுரேஷ்) வர, அதைத் தொடர்ந்து அவரின் செயல்பாடுகளில் மாற்றம்! அதனால் குடும்பமே சுப்புவுக்கு எதிரியாகிவிட, நண்பர்களின் வாழ்வு என்னவானது என்பதை கவனம் சிதறாமல் சொல்கிறது திரைக்கதை.
கைக்குள் அடங்கிவிடும் கத்தியுடன் முதல் ‘சம்பவத்துக்கு’ செல்லும்போது உருவாகும் நடுக்கம், பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் திருநங்கை மீது கோபப்பட்டு வன்முறையைப் பிரயோகிக்கும் தருணம், நெருக்கமானவரின் மரணத்தை உள்வாங்கும் காட்சி என சுப்புவாக சனந்த் எடுத்திருக்கும் அவதாரம் தமிழ் சினிமாவில் துணிச்சலான முயற்சி! குறுகலான லாரிக்குள் சுதந்திரமாக உணரும் சுப்புவின் சந்தோஷத் தருணங்கள், அங்கே வெளிப்படும் உடல்மொழி ஆகியவை இதுவரை நாம் பேசத் தயங்கிய, பேச மறந்த தருணங்கள். வன்முறையின் வார்ப்பாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்ட கார்த்தியின் ஆக்ஷன் அவதாரம் நேர்த்தி என்றால், அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் ஊற்றெடுக்கும் தருணம் உன்னத வெளிப்பாடு. தறிகெட்டு ஓடும் லாரியைப்போல மனதில் உண்டாகும் இந்த மாற்றத்தை உணர்வுபூர்வமாகத் திரையில் பதித்திருக்கிறார் ரிஷிகாந்த். குறிப்பாக, சுப்புவுக்கு நிகழும் வன்முறையின்போது அதை நடக்க விட்டுவிட்டு குற்றவுணர்ச்சியில் குமுறும் தருணம் நட்புக்கும், ஆணாதிக்கப் போக்குக்கும் இடையிலான கபடி ஆட்டம்!
அகங்காரம்கொண்ட மனித மனங்களைப் பிரதியெடுக்கும் புழுதி சூழ்ந்த வறட்சியை, அதன் வீரியம் குறையாமல் திரையில் வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. மரண ஓலத்தைக் கண்முன் நிறுத்த சிங்கிள் ஷாட், வன்முறையின் அலங்கோலத்தைக் காட்ட ஸ்டெடி ஷாட், நண்பர்களின் மனமாற்றத்தைக் காட்ட ரவுண்ட் டிராலி ஷாட் என எழுத்துக்கு நெருக்கமாகக் கவிதை வடிக்கிறது அவரது கேமரா! கேமரா இட்ட புள்ளிகளைச் சுற்றி நேர்த்தியான ஓவியத்தை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுவந்திருக்கிறது கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு. முத்து மணிச்சரத்தைக் கோப்பது போலத் தேர்ந்தெடுத்த பின்னணி இசைக் கோர்வையை வழங்கியிருக் கிறார் ‘ஜென் ஸி இசைஞர்' இளையராஜா. மாலையைச் சூடணும் இந்த மன்னனுக்கு! ‘முத்துமணி' இசை போதை தர, ‘கல்யாண விருந்து' ஃபுல் மீல்ஸ் விருந்தாக, ‘உன்னைத் தொட்டு' பாடல் மதுரை பரோட்டா - சால்னாவாக கதைகள் பேசுகின்றன. சுவர் விளம்பரங்கள், வீடு, லாரி ஷெட் என ‘டோரதி’ உலகின் நம்பகத் தன்மைக்கு உழைத்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் குமார் கங்கப்பன். அதற்கு வலு சேர்த்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா.
90-களின் கிராமத்தில் விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஆணாதிக்கத்தையும் சாதியத்தையும் அசைத்துப் பார்க்கும் பெருங்காற்றென ‘டோரதி'யின் கதையை முன்வைக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மாற்றுச் சாதியினர்மீது வரும் காதலையே ஏற்க மறுக்கும் மனிதர்கள் சூழ் உலகில், பாலின அடையாள மாற்றத்தைச் சுமந்து வரும் காதல் கதையாக இதை வடித்திருப்பது யாரும் பயணிக்காத துணிச்சலான புதுப்பாதையாகிறது. ஆண் என்றால் அடிதடி, பெண் என்றால் மென்மை என்ற போக்கை உடைத்து இளவயதில் சுப்புவை புரூஸ் லீ-யாகவும், கார்த்தியை அப்புராணியாகவும் காட்சிப்படுத்தியிருப்பது நமக்குப் பழக்கப்பட்ட சமூகக் கற்பிதங்களை உடைக்கும் முயற்சி! உயிருக்கு உயிரான உற்ற நண்பனாக கார்த்தி உடனிருப்பினும், சுப்பு தன் அகமாற்றங்களைப் பகிர்ந்துகொள்ள, புரிந்துகொள்ளப் பெண்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது ஆணாதிக்கத்தைத் தோலுரிக்கும் எழுத்து!
அழுகை பலவீனத்தின் மொழி, அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதைக் களைந்து, அது மொத்த மனிதர்களுக்குமானது என்பதை கார்த்தி உணரும் தருணம், கவிதை. சேவலுக்கு வைக்கப்படும் பெண் பெயர், பரோட்டாவில் ஊற்றப்படும் சால்னா ரத்தம்போல வழிவது, ஆணாதிக்கக் கிணற்றில் மூழ்கி மாண்ட பெண் உருவங்கள் சுப்புவுக்குக் கைகொடுப்பது எனக் குறியீடுகளை, போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது திரைக்கதை. ஒரு வார்த்தையில் ரிஷிகாந்த் கதாபாத்திரத்தின் மனமாற்றத்தைக் காட்சிப்படுத்தும் இடம், ‘அவங்க வெளியில இருக்குற பொம்பளைங்களை அடக்குறாங்கன்னா, நீ உள்ள இருக்குற பொம்பளையை அடக்குற, இதுவும் வன்முறைதான்’, ‘நீண்ட நெடிய பயணங்களைத் தொடங்கிவைக்கிறது நட்பு, முடித்து வைக்கிறது காதல்’ என்பது போன்ற வசனங்களில் ‘டோரதி'யின் அரசியலை இன்னும் அழகாக்கியிருக்கிறது கார்த்திக் சுப்புராஜ் - சரவணன் சந்திரன் எழுத்துக் கூட்டணி!
அதேபோல, ‘டோரதி'யின் பயணத்தை ஒரு மனமாற்றத்துடனேயே முடிக்க வாய்ப்பிருப்பினும், அதையும் கடந்து தமிழ் சினிமா காட்டத் தயங்கிய காதலை, சமரசமில்லாமல் காட்டிய முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், அந்தக் காதல் உண்டாகும் தருணத்தை இன்னும் ஆழத்துடனும் அவசியத்துடனும் காட்சிப்படுத்தியிருக்கலாம். முக்கியமான கதாபாத்திரத்தின் மரணத்துக்குக் காரணம் சொல்லாதது, இரண்டாம் பாதிப் பயணங்கள் நம்மையும் களைப்படையச் செய்வது என ஒரு சில குறைகளும் எட்டிப் பார்க்கின்றன.
ஆனாலும் பாலின அடையாளத்தைப் புறநிலை மட்டுமே தீர்மானிப்பதில்லை, அது அகநிலை சார்ந்த ஒன்றும்கூட என்பதைச் சமரசமின்றி, விரசமின்றி எடுத்துரைத்திருக்கும் ‘டோரதி'க்கு மகுடம் சூட்டி மகிழ்விக்கலாம்.