📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 10, 2026 05:33 PM

தவறாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஹாங்காங் தலைமையாசிரியர் முறையீடு

தவறாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஹாங்காங் தலைமையாசிரியர் முறையீடு

ஹாங்காங்கைச் சேர்ந்த சான் வுய் வர்த்தகச் சமூக உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 35 மாணவர்களும் ஆசிரியர்கள் சிலரும் இவ்வாண்டு மே 20 முதல் 24ஆம் தேதி வரையில் சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா மேற்கொள்ள வந்திருந்தனர்.

அப்போது மே 23ஆம் தேதி ஜூரோங்கில் உள்ள சஃப்ரா (சிங்கப்பூர் தேசியச் சேவையாளர் அமைப்பு) வளாகத்தில் மாணவர் குழுவை வழிநடத்தி வந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்களுக்கும் பேருந்தை எங்கு நிறுத்துவது என்பது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் லீ சியுக் ஹிங் என்ற அந்தத் தலைமை ஆசிரியர் அங்கிருந்த பாதுகாவலர்களை நோக்கி பேருந்து வாயிலில் நின்றபடி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்தச் சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு பிறகு சமூக ஊடகங்களில் பரவியது.

அவரது நடவடிக்கையை ஹாங்காங்கில் ஜூன் மாதம் விசாரித்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை பணிநீக்கம் செய்தனர். அதனை எதிர்த்து அந்த முன்னாள் தலைமையாசிரியர் முறையீடு செய்துள்ளார்.

அவர் தவறுதலாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி அவருக்கு ஏற்பட்ட நிலைமைக்கு ஈடாக அவர் $154,000 இழப்பீட்டுத் தொகையைக் கோரியுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவரது செயல்பாடுகள் இல்லை என்ற காரணத்தால் பள்ளியின் நிர்வாகம் அவரை முதலில் இடைநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகல் கடிதத்தை பள்ளியிடம் கொடுத்தார். பதவி விலகலைப் பள்ளி நிர்வாகம் நிராகரித்து அவரை பதவி நீக்கியது.

அவரது வழக்கை ஹாங்காங் தொழிலாளர் தீர்ப்பாய அலுவலகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) விசாரித்தது.

தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு இழப்பீடும் நீண்டநாள் சேவைக்கு வழங்குத்தொகையும் நிலுவையில் உள்ள ஊதியத்தையும் லீ கோரியுள்ளார்.