துவக்க கல்வி முதல் பொறியியல் பட்டம் வரை தமிழில் பயின்றவருக்கு நீர்வளத்துறையில் பதவி
பல்லடம்: பல்லடத்தைச் சேர்ந்த இளம் பொறியியல் பட்டதாரி பெண் செண்பகம், 23, தமிழ்வழி கல்வியில் பயின்று, தன் சொந்த மாவட்டத்திலேயே உதவி பொறியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்- - கிருஷ்ணவேணி தம்பதியின் மகள் செண்பகம். சிவில் இன்ஜினியர். ஆரம்ப கல்வி முதல், பட்டப்படிப்பு வரை, தமிழ் வழி கல்வியில் பயின்றவர்.
கடந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற இவருக்கு, தன் சொந்த மாவட்டத்திலேயே அரசு பணி கிடைத்துள்ளது.
செண்பகம் கூறியதாவது:
பல்லடம் அடுத்த, சிங்கனுாரில் உள்ள தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளியில் என் தந்தை தாளாளர். தாய் அரசு பள்ளி ஆசிரியை. நான், ஆரம்பக்கல்வி முதல், கல்லுாரி பட்டப்படிப்பு வரை, முழுமையான தமிழ் வழியில் பயின்றேன்.
சென்னை கிண்டி பொறியியல் கல்லுாரியில், பி.இ., முடித்த பின், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து, நீர்வளத்துறையின் கீழ், அத்திக்கடவு -- அவிநாசி திட்ட உதவி பொறியாளராக எனக்கு பணி கிடைத்துள்ளது.
சொந்த மாவட்டத்திலேயே அரசு பணி கிடைத்தது மகிழ்ச்சி. தாய்மொழி மீதான பற்று காரணமாக, தமிழ்வழியில் கல்வி கற்றேன். தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது என, உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் இரண்டு பாடங்கள் மட்டுமே தமிழில் உள்ள நிலையில், மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும். இதேபோல், தமிழ் வழி படிப்பை அனைத்து கல்லுாரிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்.
தமிழ்வழி பாடப் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களை அதிகப்படுத்த வேண்டும். இதற்கேற்ப அரசு பணிகளிலும் தமிழ்வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை தரும் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.